சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கொலின் மன்ரோ

52
Colin Munro formally retires from international cricket

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், நட்சத்திர வீரருமான கொலின் மன்ரோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரர்களில் ஒருவராக வலம்வந்த 37 வயதான கொலின் மன்ரோ, நியூசிலாந்து அணிக்காக ஒரு டெஸ்ட், 57 ஒருநாள் மற்றும் 65 T20i போட்டிகளில் விளையாடி மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் சர்வதேச T20i கிரிக்கெட்டில் 3 சதங்களையும் விளாசியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரிலும் 13 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 2016 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து அணியிலும் இடம்பிடித்திருந்தார்.

ஆனால் அத்தொடருக்குப் பிறகு போர்மில் இல்லாத காரணத்தால் நியூசிலாந்து அணியிலிருந்து கலட்டிவிடப்பட்டார். இவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான T20i போட்டியில் ஆடினார். அதன் பின்னர் நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்காத அவர் உலகெங்கிலும் நடைபெறும் T20, T10 போன்ற கிரிக்கெட் லீக்குகளில் தொடர்ச்சியாக ஆடி வந்தார்.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடிய மன்ரோ, அந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களில் 6ஆவது இடத்தையும் பிடித்தார். அதேபோல, கடந்த ஆண்டு நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக்கிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார்.

எவ்வாறாயினும், அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (10) அறிவித்துள்ளார்.

கொலின் மன்ரோ ஓய்வு பெற்றுள்ள செய்தியை நியூசிலாந்து கிரிக்கெட் சபையும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய கொலின் மன்ரோ, நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதுமே எனது விளையாட்டு வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக இருந்து வருகிறது. நியூசிலாந்தின் ஜெர்சியை அணிந்து விளையாடியதை விட நான் வேறு எதற்காகவும் பெருமையடையவில்லை. மேலும் அனைத்து வகையான கிரிக்கெட்லும் சேர்த்து 123 தடவைகள் என்னால் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடிந்தது.

இது நான் எப்போதும் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படக்கூடிய ஒன்று. ஆனால் நியூசிலாந்து அணிக்காக நான் கடைசியாக விளையாடி சிறிது காலம் ஆகிவிட்டது என்றாலும், தொடர்ந்து T20 போட்டிகளில் போர்மில் இருப்பதால் அணிக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை நான் ஒருபோதும் கைவிடவில்லை. தற்சமயம் T20 உலகக் கிண்ணத்துக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த அத்தியாயத்தை உத்தியோகப்பூர்வமாக மூடுவதற்கு இது சரியான நேரம் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<