SLC ரெட் அணிக்காக பிரகாசித்த ஷானக, பினுர!

SLC T20 World Cup Preparation Matches

46

T20 உலகக்கிண்ணத்திற்கான தயார்படுத்தலுக்காக நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டி தொடரில் இன்று (08) நடைபெற்ற போட்டியில் SLC ரெட் அணி 40 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் SLC ரெட் மற்றும் SLC யெல்லோவ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. 

T20 உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடர் சம்பியன்களான இலங்கை மகளிர் 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய SLC ரெட் அணி வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. அவிஷ்க பெர்னாண்டோ 12 பந்துகளில் 25 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 20 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். 

இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் மத்தியவரிசையில் களமிறங்கிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டதுடன், 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களை விளாசினார். 

தசுன் ஷானகவின் இந்த பிரகாசிப்புடன் SLC ரெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் SLC யெல்லோவ் அணிக்காக லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும், ஜெப்ரி வெண்டர்சே மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். 

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய SLC யெல்லோவ் அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வெற்றியிலக்கை அடையக்கூடிய துடுப்பாட்ட பங்களிப்பை வழங்க தவறியிருந்தனர். 

எனவே SLC யெல்லோவ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. பெதும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 41 ஓட்டங்களை பெற்றதுடன், வனிந்து ஹஸரங்க 28 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ மற்றும் நிமேஷ் விமுக்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். 

சுருக்கம் 

SLC ரெட் – 192/8 (20), தசுன் ஷானக 63*, கமிந்து மெண்டிஸ் 30, லஹிரு குமார 3/56 

 

SLC யெல்லோவ் – 152/8 (20), பெமும் நிஸ்ஸங்க 41, வனிந்து ஹஸரங்க 28, பினுர பெர்னாண்டோ 3/22, நிமேஷ் விமுக்தி 3/34 

 

முடிவு – SLC ரெட் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<