மகளிர் T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு

Women's T20 World Cup 2024

57

பங்களாதேஷில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி இன் மகளிருக்கான T20 உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

9ஆவது ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பங்காளதேஷில் நடைபெற உள்ளது. மொத்தம் 18 நாட்களில் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இம்முறை ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்காளதேஷ் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. எஞ்சியுள்ள 2 அணிகள் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற தகுதிகாண் சுற்றுத் தொடரின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. 

இதன்படி, குறித்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் நேற்று தகுதி பெற்றுள்ள நிலையில், இதில் சம்பியனாகும் அணி A குழுவிலும், இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணி B குழுவிலும் இடம்பெறும். 

இந்த நிலையில், 2024 ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை நேற்று (05) வெளியிடப்பட்டுள்ளன 

இந்த தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதும். 

அதன் முடிவில் அந்த பிரிவுகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இறுதிப்போட்டி ஒக்டோபர் 20ஆம் திகதி நடைபெற உள்ளது 

Aகுழுவில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தகுதிச் சுற்றில் தேர்வாகும் அணி இடம் பெற்றுள்ளன. இந்த குழுவுக்கான போட்டிகள் சில்ஹெட்டில் நடைபெறும் 

Bகுழுவில் பங்காளதேஷ், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், தகுதிச் சுற்றில் தேர்வாகும் ஒரு அணி இடம் பிடித்துள்ளன. இந்த குழுவுக்கான போட்டிகள் டாக்கவில் நடைபெறும். 

இதனிடையே, இம்முறை ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்துதென்னாபிரிக்கா அணிகள் மோத உள்ளன. 

A குழு: அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தகுதி சுற்று அணி-1 

B குழு: தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்காளதேஷ், தகுதி சுற்று அணி-2