எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தந்தை டோனி – மதீஷ பத்திரன

Indian Premier League 2024

66
Indian Premier League 2024

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மஹேந்திர சிங் டோனி தான் தந்தை (அப்பா) என இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரமுமான மதீஷ பத்திரன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் 10 போட்டிகளில் 5 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக பிளே-ஓப் சுற்றுக்கு தகுதி பெற அடுத்து வரும் போட்டிகளில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை அணிக்கு இலங்கையைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். லசித் மாலிங்கவைப் போலவே ஸ்லிங்கா ஆக்ஷனைப் பயன்படுத்தி துல்லியமான யோர்க்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டுள்ள அவர், கடைசிக்கட்ட ஓவர்களில் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை எடுத்த அவர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 5ஆவது முறையாக சம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

எனவே, கடந்த ஆண்டைப் போல இம்முறையும் சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கின்ற மதீஷ பத்திரன, இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் வரிசையில் 5ஆவது இடத்தில் உள்ளார்.

இதேவேளை, பொதுவாகவே யாரையும் சாதாரணமாக பாராட்டாத எம்எஸ் டோனி மதீஷ பத்திரனவை அடிக்கடி பாராட்டியிருந்தார். குறிப்பாக உலகக் கிண்ணம் போன்ற வெள்ளைப்பந்து தொடர்களில் மட்டும் பயன்படுத்தினால் அவர் பலங்கை அணிக்கு மிகப் சொத்தாக அமைவார் என்று டோனி பாராட்டினார். அத்துடன், சென்னை அணியில் நான் உங்கள் மகனை பார்த்துக்கொள்கிறேன் என்று கடந்த வருடம் மதீஷ பத்திரனவின் குடும்பத்திடம் டோனி தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை அணியில் டோனி தன்னை மற்றொரு தந்தையைப் போல பார்த்துக் கொள்வதாக மதீஷ பத்திரன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் லுழரவரடிந தளத்தில் மதீஷ பத்திரன தொடர்பில் விசேட காணொளியொன்று வெளியிட்டுள்ளது. இந்த நேர்காணலில் சென்னை அணியுடனான பயணம் தொடர்பிலும், எம்எஸ் டோனியுடனான உறவு தொடர்பிலும் மதீஷ பத்திரன கருத்து வெளியிட்டுள்ளார். அவர் அங்கு பேசுகையில்,

எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தந்தை டோனி தான். எப்போதும் எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று டோனி கொடுக்கும் ஆலோசனைகள் விலை மதிப்பில்லாதது. கிட்டத்தட்ட வீட்டில் இருக்கும் போது எனது அப்பா என்னை எப்படி கவனித்துக் கொள்வாரோ, அதேபோல் கிரிக்கெட் களத்தில் டோனி என்னை கவனித்துக் கொள்கிறார்.

களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் பெரியளவில் எந்த அறிவுரையும் கூற மாட்டார். ஆனால் களத்திற்கு வெளியே டோனி கூறும் சிறிய விடயமும் மிகப்பெரிய வித்தியாசத்தை எனக்கு உணர்த்துகிறது. அது எனக்கு மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<