T20 உலகக் கிண்ண நடுவர் குழாத்தில் இரண்டு இலங்கையர்கள்

ICC Men's T20 World Cup 2024

50
ICC Men's T20 World Cup 2024

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள நடுவர்கள் குழாத்தில் இலங்கையின் குமார் தர்மசேன கள நடுவராகவும், மற்றுமொரு இலங்கையரான ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராகவும் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான முதல் சுற்றுக்கான போட்டி நடுவர்களை ஐசிசி நேற்று (03) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐசிசி பெயரிட்டுள்ள 20 பேர் கொண்ட அதிகாரிகளின் பட்டியலில், 20 கள நடுவர்கள் மற்றும் 6 போட்டி மத்தியஸ்தர்கள் இடம்பெற்றுள்ளனர்.

55 போட்டிகள் கொண்ட இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல பிரதான போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளார். ஐசிசி இன் போட்டி மத்தியர்கள் குழுவின் பிரதானியான இவர் 9ஆவது தடவையாக T20 உலகக் கிண்ணத்தில் போட்டி மத்தியஸ்தராக பணிபுரியவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இவருடன், அவுஸ்திரேலியாவின் டேவிட் பூன், நியூசிலாந்தின் ஜெஃப் குறோ, ஜிம்பாப்வேயின் அண்டி பைக்ரொவ்ட், மேற்கிந்திய தீவுகளின் ரிச்சி ரிச்சர்ட்சன், இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோரும் இந்த ஆண்டு வு20 உலகக் கிண்ணத்தில் போட்டி மத்தியஸ்தர்களாக பணியாற்றவுள்ளனர்.

இதனிடையே, 16 பேர் கொண்ட கள நடுவர்கள் குழாத்தில் இலங்கையின் குமார் தர்மசேன இடம்பெற்றுள்ளார். ஐசிசி இன் முன்னணி கள நடுவர்களில் ஒருவராக வலம் வருகின்ற குமார் தர்மசேன, 8ஆவது தடவையாக T20 உலகக் கிண்ணத் தொடரில் கள நடுவராக பணியாற்றவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் இறுதியாக கடந்த 2022இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் மத்தியஸ்தராக இலங்கையின் ரஞ்சன் மடுகல்லவும், கள நடுவர்களில் ஒருவராக குமார் தர்மசேனவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர, குமார் தர்மசேனவுடன், 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி இன் வருடத்தின் அதிசிறந்த நடுவருக்கான விருதை வென்ற ரிச்சர்ட் இலிங்வேத், நியூசிலாந்தின் கிறிஸ் கஃபானி, அவுஸ்திரேலியாவின் போல் ரைஃபல் ஆகியோரும் நடுவர் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் நால்வரும் அவுஸ்திரேலியாவில் 2022இல் நடைபெற்ற ஐசிசி T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மற்றும் 3ஆவது, தொலைக்காட்சி மத்தியஸ்தர்களாக கடமையாற்றி இருந்தனர்.

ஜுன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி இன் 9ஆவது T20 உலகக் கிண்ணத் தொடரானது 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரானது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் உள்ள 9 மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி மத்தியஸ்தர்கள்

டேவிட் பூன், ஜெஃப் குறோ, ரஞ்சன் மடுகல்லே, அண்டி பைக்ரொவ்ட், ரிச்சி ரிச்சர்ட்சன், ஜவகல் ஸ்ரீநாத் 

நடுவர்கள்

கிறிஸ் ப்றவுண், குமார் தர்மசேன, கிறிஸ் கஃபானி, மைக்கல் கோ, ஏட்றியன் ஹோல்ட்ஸ்டிக், ரிச்சர்ட் இலிங்வேர்த், அலாஹுடின் பலேக்கர். ரிச்சர்ட் கெட்ல்பறோ, ஜெயராமன் மதனகோபால், நிட்டின் மேனன், சாம் நோகாஜ்ஸ்கி, அஷான் ராஸா, ரஷித் ராஸா, போல் ரைஃபல், லெங்டன் ரூசியர், ஷஹித் சய்க்காத், ரொட்னி டக்கர், அலெக்ஸ் வாஃப், ஜோயல் வில்சன், அசிப் யாக்கூப்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<