அமெரிக்காவுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இலகு வெற்றி

49
SL Women vs USA Women - WT20 Qualifier 2024

2024ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய அணிகளை தெரிவு செய்ய நடைபெற்று வரும் தகுதிகாண் சுற்றுப் போட்டியில் நேற்று (03) ஐக்கிய அமெரிக்காவை எதிர்கொண்ட இலங்கை மகளிர் வீராங்கனைகள் 18 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த வெற்றியுடன் மகளிர் T20 உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் குழு A இல் உள்ள இலங்கை அணியானது தமது குழுநிலைப் போட்டிகள் அனைத்தினையும் வெற்றியுடன் நிறைவு செய்து கொள்கின்றது.

>>சிராஸ், சூரியபண்டார அதிரடியில் ஒருநாள் தொடரை வென்ற இலங்கை A அணி<<

ஐக்கிய அமெரிக்கா – இலங்கை மகளிர் அணிகள் மோதிய போட்டி அபுதாபியில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீராங்கனைகள் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததோடு, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கை மகளிர் துடுப்பாட்டம் சார்பில் விஷ்மி குணரட்ன, ஹன்சிமா கருணாரட்ன ஆகியோர் தலா 25 ஓட்டங்கள் வீதம் எடுத்தனர். ஐக்கிய அமெரிக்க பந்துவீச்சில் கீடிகா கோடலி, அடிடீபா சுடசமா மற்றும் சான்வி இம்மாதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 124 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அமெரிக்க அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 105 ஓட்டங்கள் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

அமெரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் டிஷா டின்க்ரா 28 ஓட்டங்களைப் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்தார். இலங்கை

மகளிர் பந்துவீச்சில் அதன் தலைவி சாமரி அத்தபத்து 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, போட்டியின் ஆட்டநாயகியாகவும் தெரிவாகினார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இப்போட்டியின் வெற்றியோடு T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் குழு A இன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றிருப்பதோடு தொடரின் அரையிறுதிக்கும் தெரிவாகியிருக்கின்றது.

T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் அரையிறுதியில் இலங்கை நாளை (05) ஐக்கிய அரபு இராச்சியத்தினை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 123/4 (20) விஷ்மி குணரட்ன 25(22), சான்வி இம்மாதி 14/1

ஐக்கிய அமெரிக்கா – 105/6 (20) டிஷா டின்க்ரா 28(28), சாமரி அத்தபத்து 14/3

முடிவு – இலங்கை 18 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<