டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனரில் யுபுன், நதீஷாவிற்கு வெற்றி

Dubai Athletic Grand Prix 2024

42
Dubai Athletic Grand Prix 2024

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நேற்று இரவு (03) நடைபெற்ற டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் மற்றும் நதீஷா ராமநாயக்க ஆகிய இருவரும் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.

எனினும், குறித்த இரண்டு வீரர்களுக்கும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான உரிய அடைவு மட்டத்தை எட்ட முடியாமல் போனது.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.18 செக்கன்களில் நிறைவு செய்த யுப்புன் அபேகோன் 3ஆம் இடத்தைப் பிடித்தார். சுமார் ஓராண்டுக்குப் பிறகு சர்வதேசப் போட்டியொன்றில் ஆண்களுக்கான 100 மீற்றரில் பங்குகொண்ட யுபுனுக்கு, ஒலிம்பிக் அடைவு மட்ட நேரமான 10.00 செக்கன்களை அடைய முடியாமல் போனது.

எவ்வாறாயினும், ஆண்களுக்கான 100 மீற்றரை 9.96 செக்கன்களில் ஓடி முடித்து தனது அதிசிறந்த காலத்தைப் பதிவு செய்துள்ள யுபுன் அபோகோன், இலங்கையின் அதிவேக வீரராகவும், தெற்காசியாவின் அதிவேக வீரராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.18 செக்கன்களில் நிறைவுசெய்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த Chitharu Ali போட்டிச் சாதனையுடன் முதலாம் இடத்தைப் பிடித்தார்.

இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய நதீஷா ராமநாயக்க அப் போட்டியை 54.01 செக்கன்களில் நிறைவு செய்து 2ஆவது இடத்தைப் பெற்றார். ஆனால் ஒலிம்பிக் அடைவு மட்டமான 50.95 செக்கன்களை அவரால் எட்ட முடியாமல் போனது.

எனினும், அப் போட்டியை 53.41 செக்கன்களில் நிறைவுசெய்த சுவீடனைச் சேர்ந்த லீசா லைலா போட்டிச் சாதனையுடன் முதலாம் இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை சார்பில் 2 வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் தருஷி கருணாரத்ன போட்டியின் போது துரதிஷ்டவசமாக உபாதைக்கு முகங்கொடுத்தார். இதனால் அவரால் போட்டியை நிறைவு செய்ய முடியாமல் போனது. மறுபுறத்தில் முன்னாள் தேசிய சம்பியனான கயந்திகா அபேரத்னவிற்கு 9ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<