இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை

Asia Rugby Division 1 Championship 2024

99

ஆசிய றக்பி முதலாம் பிரிவு நொக் அவுட் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை 45 – 10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி ஆசிய றக்பி முதலாம் பிரிவு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று (30) இரவு மின்னொளியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியின் முடிவில் இலங்கை அணி 21-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அபாரமாக ஆடிய இலங்கை அணி மேலும் 24 புள்ளிகளை எடுத்து 45 – 10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 7 ட்ரைகள் மற்றும் 5 கொன்வேர்ஷன்கள் மூலம் புள்ளிகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நேற்று பிற்பகல் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் கத்தாரிடம் கடும் சவாலை எதிர்கொண்ட கஸகஸ்தான் அணி 33 – 31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மிகவும் இறுக்கமான வெற்றியைப் பதிவுசெய்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் கத்தார் அணி 21-14 என முன்னிலை பெற்றாலும், 66ஆவது நிமிடத்தில் கஸகஸ்தான் அணி 33 – 31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று ஆட்டம் முடியும் வரை முன்னிலையில் இருந்தது.

இதன்படி, இலங்கை மற்றும் கஸகஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி இரவு 7:00 மணிக்கு கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெறவுள்ளதுடன், அதற்கு முன்னதாக அன்றைய தினம் மாலை 4:00 மணிக்கு 3ஆவது இடத்துக்கான போட்டியில் கத்தார் மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.

7 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் நடைபெறும் முதலாவது சர்வதேச றக்பி போட்டியான ஆசிய றக்பி முதலாம் பிரிவு நொக் அவுட் போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய றக்பி 15 பேர் கொண்ட பிரதான சம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<