பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் ஆப்கான் A அணியை வீழ்த்தியது இலங்கை

Afghanistan A Tour of Sri Lanka 2024

39
Afghanistan A Tour of Sri Lanka 2024

சுற்றுலா ஆப்கானிஸ்தான் A அணிக்கும், இலங்கை A அணிக்கும் இடையில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (30) நடைபெற்ற 2ஆவது உத்தியோகப்பற்றற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை A அணி டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்மூலம் 5 போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் இலங்கை ஏ அணி 2–0 என முன்னிலை பெற்றது.

இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் A அணித்தலைவர் இக்ரம் அலிகில் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செய்திருந்தார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் A அணி, இலங்கையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 27.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பின்வரிசையில் வந்த கைஸ் அஹ்மட் 46 ஓட்டங்களையும், பர்மானுல்லாஹ் 37 ஓட்ட்ங்களையும், சஹீதுல்லாஹ் 16 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

பந்துவீச்சில் மொஹமட் சிராஸ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், சஹன் ஆராச்சிகே 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சாமிக்க குணசேகர 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

122 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இடையில் மழை குறுக்கிட்டது.

இதன்காரணமாக டக்வத் லூயிஸ் முறைப்படி இலங்கை A அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

கமில் மிஷார 45 பந்துகளில் 6 பௌண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 45 ஓட்டங்களையும், லஹிரு உதார 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் A  அணி – 121 (27.2) – கைஸ் அஹ்மட் 46, பர்மானுல்லாஹ் 37, மொஹமட் சிராஸ் 2/17, சஹன் ஆராச்சிகே 2/23, சாமிக்க குணசேகர 2/28

இலங்கை A அணி – 104/2 (15.2) கமில் மிஷார 45*, லஹிரு உதாரா 20

போட்டி முடிவு – இலங்கை A அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி (D/L முறையில்)

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<