T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

ICC Men's T20 World Cup

49
ICC Men's T20 World Cup

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இந்திய குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே முதலாம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் பேரவை) அறிவித்து இருந்தது

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டது. இந்த நிலையில், T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

T20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா தொடர்வார் எனவும், உதவி தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வருகின்ற ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபே, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் ஆகியோர் T20 உலகக் கிண்ண இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல, விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பாண்ட்டுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இம்முறை ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன், இந்திய அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

அதுமாத்திரமின்றி, இம்முறை ஐபிஎல் தொடரில் மோசமான போர்ம் காரணமாக விமர்சிக்கப்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கும் இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் கேஎல் ராகுலுக்கு இந்திய T20 அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல, உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்ததால் இந்திய அணிக்கான ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கும் இந்திய அணியில் இடமில்லை.

இதே போன்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஷமி இன்னும் காயத்தில் இருந்து மீளாத காரணத்தால் T20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

அதேநேரம், மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமட் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

T20 உலகக் கிண்ண இந்திய அணி விபரம்:

ரோஹித் சர்மா (தலைவர்), விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பாண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொஹமட் சிராஜ்.

மாற்று வீரர்கள்: சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமட், ஆவேஷ் கான்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<