நுவனிந்து, சஹனின் அதிரடியுடன் இலங்கை A அணிக்கு முதல் வெற்றி

Afghanistan A Tour of Sri Lanka 2024

58
Afghanistan A Tour of Sri Lanka 2024

ஆப்கானிஸ்தான் A அணிக்கெதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நிஷான் மதுஷ்க, நுவனிந்து பெர்னாண்டோவின் அரைச் சதம் மற்றும் அணித்தலைவர் சஹன் ஆராச்சிகேவின் அபார பந்துவீச்சு என்பவற்றின் உதவியுடன் இலங்கை A அணி டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 8 ஓட்டங்களால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் A கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட ஒற்றை டெஸ்ட் போட்டியான்றில் விளையாடி வருகிறது. 

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (28) நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் A அணியின் தலைவர் இக்ரம் அலிகில் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். 

இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை A அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்களைக் குவித்தது. 

இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் நுவனிந்து பெர்னாண்டோ அரைச் சதம் ஒன்றுடன் 67 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 83 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க 82 பந்துகளில் 72 ஓட்டங்களுடன் பெறுமதி சேர்த்திருந்தார். 

ஆப்கானிஸ்தான் A அணியின் பந்துவீச்சு சார்பாக பிலால் சமி 4 விக்கெட்டுகளையும், மொஹமட் சலீம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். 

இதனையடுத்து இலங்கை A அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 305 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் A அணி 48 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டது. 

அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் ஆப்கானிஸ்தான் A அணியின் வெற்றி இலக்கு 286 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் A அணி தோல்வியைத் தழுவியது. 

ஆப்கானிஸ்தான் A அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரியாஸ் ஹஸன் 115 பந்துகளில் 100 ஓட்டங்களையும், டார்விஷ் ரசூலி 75 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.   

இலங்கை A அணி சார்பாக பந்துவீச்சில், அணித்தலைவர் சஹன் ஆராச்சிகே 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். மேலும், மொஹமட் சிராஸ், சாமிக்க குணசேகர, சாமிக்க கருணாரத்ன மற்றும் துஷான் ஹேமன்த ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர் 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை A அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டியின் சுருக்கம் 

இலங்கை A அணி: 305/8 (50) – நுவனிந்து பெர்னாண்டோ 83, நிஷான் மதுஷ்க 72, பிலால் சமி 4/51, மொஹமட் சலீம் 3/63 

 

ஆப்கானிஸ்தான் A அணி – 277/7 (48) – ரியாஸ் ஹசன் 100, டார்விஷ் ரசூலி 75, சஹன் ஆராச்சிகே 3/40, மொஹமட் சிராஸ் 1/29 

 

போட்டி முடிவு – இலங்கை A அணி டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 8 ஓட்டங்களால் வெற்றி. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<