2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 20 வயது இலங்கை வீரர்

Paris Olympics 2024

48

இலங்கையின் இளம் பெட்மிண்டன் வீரர் விரேன் நெத்தசிங்ஹ 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிறற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

உலக பெட்மிண்டன் தரவரிசையில் 72ஆவது இடத்தில் உள்ள 20 வயதான விரேன், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பெட்மிண்டன் போட்டிக்கு தகுதி பெற்ற உலகின் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அதேபோல, 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு நேரடி தகுதி பெற்ற முதல் இலங்கை வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

11 சர்வதேச பெட்மிண்டன் போட்டிகளில் பங்குபற்றியுள்ள விரேன், இம்முறை பருவகாலத்தில் 24,030 போனஸ் புள்ளிகளைப் பெற்று நேரடியாக பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுக் கொண்டதுடன், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கு நேரடியாக தகுதி பெற்ற 39 வீரர்களில் 32ஆவது இடத்தையும் பிடித்தார்.

இதன்படி, பெட்மிண்டன் விளையாட்டில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்ற நான்காவது இலங்கையராக விரேன் நெத்தசிங்ஹ வரலரற்றில் இடம்பிடித்தார். முன்னதாக, நிரோஷன் விஜேகோன் (1992 பார்சிலோனா), திலினி ஜயசிங்க (2012 லண்டன்) மற்றும் நிலூக கருணாரத்ன (2012 லண்டன், 2016 ரியோ டி ஜெனிரோ, 2020 டோக்கியோ) ஆகிய 3 வீரர்கள் ஒலிம்பிக் பெட்மிண்டனில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை வீரர்கள் ஆவர்.

கொழும்பு புனித. பேதுரு கல்லூரியில் பெட்மிண்டன் விளையாட்டில் காலடி வைத்த விரேன், அவரது தந்தையும், பயிற்சியாளருமான ரொஷான் நெத்தசிங்ஹவின் வழிகாட்டலுடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெற்ற பெட்மிண்டன் போட்டிகளில் பங்குபற்றி பல வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதில் சுவீடன், ஈரான், உகண்டா, நெதர்லாந்து, போலந்து, தாய்லாந்து, கஸகஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற சர்வதேச பெட்மிண்டன் தொடர்களில் அவர் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இம்முறை பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆடவர் ஒற்றையர் பிரிவு பெட்மிண்டனில் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுக்க வாழ்த்துவதாக இலங்கை பெட்மிண்டன் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதனிடையே, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெட்மிண்டன் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இறுதி திகதி இம்மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<