சமரியின் சாதனை சதத்தால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி சரித்திரம் படைத்த இலங்கை

Sri Lanka Women’s tour of South Africa 2024

40

தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக Potchefstroom, சென்வஸ் பாக் விளையாட்டரங்கில் நேற்று (17) நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்துவின் அதிரடி சதம் மற்றும் நிலக்ஷிகா சில்வாவின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. 

இந்த வெற்றியுடன் இவ்விரு அணிகளுக்கும் iயிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் முடித்தது 

இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா மகளிர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 302 ஓட்டங்கள் என்ற உலக சாதனை இலக்கினை 44.3 ஓவர்களில் (305 ஓட்டங்கள்) இலங்கை அணி துரத்தி அடித்ததுடன், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை துரத்தி அடித்து பதிவு செய்த உலக சாதனை வெற்றியாகவும் இது வரலாற்றில் இடம்பிடித்தது 

இதன்மூலம் மகளிர் கிரிக்கெட்டில் 300 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையை துரத்தி அடித்து வெற்றியீட்டிய முதல் அணி என்ற சாதனையை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி படைத்தது 

முன்னதாக 2012இல் நியூசிலாந்து மகளிர் அணியுடனான ஒருநாள் போட்டியில் 289 ஓட்டங்களை துரத்தி அடித்ததே இதுவரை மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்ட எண்ணிக்கையை துரத்தி அடித்து பெற்றுக்கொண்ட சாதனையாக இடம்பிடித்தது. எனவே அந்த சாதனையை சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மகளிர் அணி முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.       

அதேபோல, இந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்து சதமடித்து அசத்திய இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து, 26 பௌண்டறிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்காலாக 139 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களை எடுத்தார் 

இதன்மூலம் மகளிர் ஒருநாள் போட்டிகளில் இலங்கை சார்பில் தனிநபர் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த வீராங்கனை என்ற தனது சொந்த சாதனையையும் அவர் முறியடித்திருந்தார். மேலும், மகளிர் ஒருநாள் போட்டிகளில் 3ஆவது தனிநபர் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையையயும் அவர் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், மகளிருக்கான ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களைக் குவித்த வீராங்கனைகளில் (9 சதங்கள்) 3ஆவது இடத்தையும் சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டார். இந்தப் பட்டியலில் முதலிரெண்டு இடங்களில் அவுஸ்திரேலியாவின் மெக் லெனின் (15 சதங்கள்) மற்.றும் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (13 சதங்கள்) ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர் 

இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20i போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் T20i தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது 

இதையடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அதன்பின் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (17) நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது 

இதையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு தலைவி லோரா வுல்வாட்லாரா குட்ஆல் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். எனினும், லாரா குட்ஆல் 31 ஓட்டங்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டெல்மி டக்கர், சுனே லூஸ் ஆகியோரும் சொற்ப ஓட்டங்;களுடன் வெளியேறினர் 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லோரா வுல்வாட்; சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த மரிஸான் கேப் 36 ஓட்டங்களையும், நதின் டி கிளார்க் 35 ஓட்டங்களையும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டனர். ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை தனது அதிரடியைக் கைவிடாத அணித்தலைவி லோரா வுல்வாட் அடுத்தடுத்து பௌண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித் தள்ளினார் 

இதனால் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லோரா வுல்வாட் 23 பௌண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் விளாசியதுடன் 184 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் தென்னாபிரிக்கா மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 301 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

தென்னாபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 302 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. 

துடுப்பாட்டத்தில் சமரி அத்தபத்து 26 பௌண்டறிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்காலாக 139 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களையும், நிலக்ஷிகா சில்வா 3 பௌண்டறிகளுடன் 71 பந்துகளில் 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர் 

பந்துவீச்சில் அயாபொங்கா காகா 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 

போட்டியின் ஆட்டநாயகி விருதை இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து பெற்றுக்கொள்ள, தொடர் நாயகி விருதை தென்னாபிரிக்கா அணித்தலைவி லோரா வுல்வாட் தட்டிச்சென்றார்.   

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<