டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாபிரிக்கா வேகப் புயல்

Indian Premier League 2024

32

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகிய இங்கிலாந்து வீரர் ஹெரி ப்ரூக்கிற்குப் பதிலாக தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸை டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்தியாவில் 17ஆவது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பல்வேறு அணிகளைச் சேர்த்த பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியது அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வீரர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் 

அந்தவகையில் தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஹெரி ப்ரூக் விலகினார். முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஹெரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய்க்கு டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது 

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஹாரி ப்ரூக், 11 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உட்பட 190 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவரை வீரர்கள் ஏலத்திற்கு முன்னரே ஹைதராபாத் அணி நிர்வாகம் கழட்டிவிட்டது 

இந்நிலையில் தான் ஐபிஎல் மினி ஏலத்தில் டெல்லி கெபிடல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் காரணமாக அவர் டேவிட் வோர்னருடன் இணைந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவோ அல்லது நான்காம் இலக்கத்திலோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முறை ஐபிஎல் தொடரிலிருந்தே ஹெரி ப்ரூக் விலகுவதாக அறிவித்தார். இது டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது 

எவ்வாறாயினும், ஹெரி ப்ரூக்கிற்குப் பதிலாக தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸை டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் அவரது அடிப்படி விலையான 50 இலட்சத்திற்கு டெல்லி அணி அவரை ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது 

30 வயதான லிசாட் வில்லியம்ஸ் 83 T20i போட்டிகளில் விளையாடி 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 19.76 ஆகும். 2022ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அவர், 2021இல் பாகிஸ்தான் அணிக்கெதிராக T20i போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை 2 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் 11 T20i போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 

இதனிடையே, தென்னாபிரிக்காவில் நடைபெறுகின்ற SAT20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகின்ற இவர், இம்முறை சீசனில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் பிடித்தார் 

இதேவேளை, இம்முறை ஐபிஎல் தொடரில் ரிஷப் பாண்ட் தலைமையில் விளையாடி வருகின்ற டெல்லி அணி, நேற்று (07) நடைபெற்ற லீக் போட்டியில் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது. 

எனவே, டெல்லி கெபிடல்ஸ் அணி தற்போது 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<