இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கசுன் ராஜிதவிற்கு ஓய்வு

50
Kasun Rajitha rested for the 2nd Test against Bangladesh

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் இருந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளரான கசுன் ராஜித விலகியிருக்கின்றார்.

>>டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனன்ஜய, கமிந்து!<<

கசுன் ராஜித முதுகு உபாதையொன்றுக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில் இந்த உபாதையின் காரணமாகவே அவர் இலங்கை குழாத்தில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை உபாதைக்குள்ளான கசுன் ராஜித நாடு திரும்பியிருப்பதோடு அவரின் பிரதியீடாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் அசித பெர்னாண்டோ இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கசுன் ராஜித இலங்கை பங்களாதேஷிற்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற மொத்தமாக 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (30) சட்டோக்ரமில் ஆரம்பமாகவிருக்கின்றது.

அதேவேளை இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<