Tuesday 9 January 2024

`அலெக்ஸ் பரந்தாமனின் `ஒரு பிடி அரிசி’ சிறுகதைத்தொகுப்பு

      

ஒரு சிறுகதையானது நாம் வாழ்ந்த/வாழுகின்ற இடம், சுற்றுப்புறச்சூழல், நம் மீது ஆதிக்கும் செலுத்தும் சக்திகள் என்பவற்றைப் பொறுத்தே இருக்கும்.

எனது முதல் சிறுகதையான `ஈழநாடுபத்திரிகையில் வெளிவந்த (1983) `இனி ஒரு விதி செய்வோம்அப்படிப்பட்ட ஒன்றுதான். முதலாழி, தொழிலாளி, கண் தெரியாதவன், கால் ஊனமாகிப் போனவன், விசரி போன்ற பாத்திரங்கள் கொண்டு பின்னப்பட்டது. அதன் பின்னர், 1995 ஆம் ஆண்டு வரையும் வெளிவந்த எனது படைப்புகள், இலங்கை என்ற வட்டத்திற்குள் சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருந்தன. அப்புறம் புலம்பெயர்ந்து போன பின்னர், எல்லாமே மாறிப் போய்விட்டன. நான் இலங்கையில் தொடர்ந்தும் இருந்திருந்தால், அலெக்ஸ் பரந்தாமன் அவர்கள் எழுதிய `ஒரு பிடி அரிசிஎன்ற தொகுப்பில் உள்ள கதைகளைப் போலத்தான் தொடர்ந்தும் எழுதியிருப்பேன். அதற்குரிய சூழ்நிலை தான் அப்பொழுதும் / இப்பொழுதும் அங்கே நிலவுகின்றது. அப்படியான ஒரு சமுதாயத்திற்குள் தான் நானும் அப்போழுது இருந்தேன்.

அலெக்ஸ் பரந்தாமனின் (இயற்பெயர் – இராசு தங்கவேல்) சிறுகதைத் தொகுப்பைக் கையில் எடுத்ததும், என்னைக் கவர்ந்த முதல் அம்சம், அட்டைப்படமும் பின் அட்டைக் குறிப்பும் ஆகும். செளந்தர் அவர்கள் வரைந்த அட்டைப்படம், முதல் கதையை மாத்திரம் சொல்லவில்லை. முதலாழி/தொழிலாளியைப்  பிரதிபலிக்கின்றது. ஏழையின் வயிற்றைப் படம் பிடிக்கின்றது. இன்னும் எத்தனை எத்தனையோ சங்கதிகளைச் சொல்லாமல் சொல்கின்றது.

அலெக்ஸ் பரந்தாமன் தரும் பின் அட்டைக் குறிப்பு:

“எழுதுவது எனது தொழில் அல்ல! ஆயினும்,

எழுத்துக்களை, நான் மிகவும் நேசிக்கின்றேன். எழுத்தென் வயிற்றுக்கு சோறு தருவதில்லை. ஆயினும் எழுதிக்கொண்டே இருக்க விரும்புகின்றேன்.

இதுவே அன்று முதல் இன்றுவரை ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் நிலைமை ஆகும்.

தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. 1989 இற்கும் 2020 இற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. பன்னிரண்டுமே வடிவத்தில் சிறியவை. எவரும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் எந்தவித சிக்கலுமில்லாதவை. ஆனால் மனதில் பாரத்தை இறைக்கி வைப்பவை. ஒன்றிரண்டு கதைகளைத் தவிர, இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் அன்றாட வாழ்வைப் பேசும் கதைகள்.

`உள்ளம்சஞ்சிகையில் வெளிவந்த `ஒரு பிடி அரிசிதொகுப்பின் பெயரும், தொகுப்பின் முதல் கதையும் ஆகும். ஆசிரியர் எழுதிய முதல் கதையும் இதுவே. கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்ற கதைதான். அந்த நிலை ஒரு ஏழைக்கு வந்துவிட்டால் எப்படியிருக்கும்? அதுதான் கதை. புதுக்குடியிருப்பின் அழகான காட்சி வர்ணிப்பில், வரட்சி நிவாரண அரிசியைப்பெற அலைந்துழலும் மருதமுத்துக் கிழவரின் கதை அது. `மினி வானில் பயணித்ததற்காக, மருதமுத்துக் கிழவரிடம் கொஞ்ச அரிசியைப் பெற்றுக்கெண்டு மினிபஸ் நடத்துனர் போயிருக்கலாம். அல்லது மனிதாபிமான ரீதியில் கிழவரை இறக்கிவிட்டுப் போயிருக்கலாம்என்ற ஆதங்கம் மனதில் வந்து போகின்றது. ஆனால் யதார்த்தம் அப்படியல்ல என்பதே ஆசிரியரின் நிலைப்பாடு. நிஜத்தைச் சொல்லிச் செல்லும் கதை.

அன்றாடம் குடிப்பதற்காக தண்ணீர் பெற்றுக் கொள்ளும் அவலத்தைச் சொல்கின்றது `தண்ணீர்என்ற கதை. இந்தக் கதையில்கூட மனிதாபிமானம் செத்துப்போய் விட்டது என்பதை பவானி பாத்திரம் மூலம் உணர்த்துகின்றார் ஆசிரியர்.

`பசி ஒரு கொடுமைகதையில் பசியின் கொடுமை தாளாது நஞ்சூறிப்போன நிழல் மரவள்ளிக் கிழங்கைச் சாப்பிட்டு இறந்துபோகும் கொடுமையையும் ; `பேராசைகதையில் சீட்டுப் பிடிப்பதும், ஏமாற்றப்படுவதும், பின்னர் தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு தீர்வு காண்பதும் என நடைமுறையில் காணும் காட்சிகளை முன் வைக்கின்றார் ஆசிரியர்.

`மடத்து சோறு’, `நிறக்கவர்ச்சிஎன்பவை கதைத்தொகுப்பில் இருக்கும் ஏனைய கதைகளில் இருந்து வேறுபடுகின்றன.

கந்தசாமி, கிட்டினன் இரண்டு தினக்கூலிகள்---நண்பர்கள். அதில் கிட்டினன் வெளிநாட்டுப் பணத்தால் திடீரென கொஞ்சம் மினுப்பாகி விடுகின்றான். அவர்களிடையே நடக்கும் ஊடாட்டம் தான் `மடத்துச் சோறு கதையின் கரு. வர்க்கத்துக்குள் வர்க்கம். கடைசியில் கந்தசாமியின் பசியைப் போக்குவது என்னவோ கோயில் குருக்கள் தான். தொகுப்பில் சற்று வித்தியாசமான கதை. எனக்குப் பிடித்த கதையும் கூட.

`ஒரு பிடி அரிசியில் வரும் மருதமுத்துக் கிழவர்  - `பசி ஒரு கொடுமைகதையில் வரும் நாகம்மா, தேவகி - `பேராசைகதையில் வரும் செபமாலை - `மால்கதையில் வரும் அழகையா -`மடத்துச் சோறு கந்தசாமி - `நிறக்கவர்ச்சி அகிலா என்பவர்கள் மனதில் நின்றுவிடும் பாத்திரங்கள்.

சலவைத் தொழிலாளர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள், தினக்கூலிகள், விவசாயிகள் இவரது கதைகளின் கதா மாந்தர்கள். ஏழை – பணக்காரன், உயர்ந்தவர் – தாழ்ந்தவர், சாதிப்பாகுபாடுகள் இவரது கதைகளின் பேசுபொருள்.

இவற்றில் – கதை நிகழும் காலப்பகுதிகளில் – இலங்கையில் நடந்த இன விடுதலைப் போராட்டம் தொடர்பான எந்தவிதமான நேரடிக்கதைகளும் தொகுப்பில் காணப்படவில்லை. தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் – விளிம்புநிலை வாழ் மனிதர்களின் கதைகள் – என ஆசிரியரே சொல்லிவிடுவதால் அந்த எல்லைக்குள் நின்றுதான் நாம் இந்தக் கதைகளைப் படிக்க வேண்டும்.

No comments:

Post a Comment