”தி போல் பிளாஸ்டர் – 2023” கால்பந்து தொடரின் சம்பியன்களாக ஏறாவூர் அலிகார்

237

20 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு – 1 பாடசாலை அணிகளுக்கான ”தி போல் பிளாஸ்டர் – 2023 (The Ball Blaster 2023)” கால்பந்து தொடரின் சம்பியன்களாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை தெரிவாகியுள்ளது.  

கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்று முடிந்ததி போல் பிளாஸ்டர் – 2023” கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று (11) கொழும்பு ஸாஹிரா கல்லூரியினை பெனால்டி (5-4) முறையில் வீழ்த்தியே ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

இலங்கையின் கால்பந்து விளையாட்டில் முன்னணி வகிக்கும் பாடசாலைகள் மோதிய இந்த தொடரின் போட்டிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தொடரின் குழுநிலைப் போட்டிகள் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி காலிறுதிப் போட்டியில் கம்பளை ஸாஹிரா கல்லூரியை 6-0 என்கிற கோல்கள் வீழ்த்தியும், தொடரின் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு தாருஸ்ஸலாம் கல்லூரி அணியினை 3-2 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது 

மறுமுனையில் ஏறாவூர் அலிகார் பாடசாலை அணியானது காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரியை 5-0 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்தியதோடு, தொடரின் அரையிறுதியில் தொடரின் நடப்புச் சம்பியன்களாகக் காணப்படும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணியினை 2-0 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது 

பின்னர் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் மழையின் குறுக்கீடு காணப்பட்ட காரணத்தினால் அடுத்த நாளுக்கு போட்டி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அடுத்த நாளில் இடம்பெற்ற இறுதிப் போட்டி இரு அணிகளும் கோல்கள் பெறாது சமநிலையில் நிறைவுக்கு வர இறுதிப் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை 5-4 என பெனால்டி முறையில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியினை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது. 

கடந்த ஆண்டு பிரிவு 1 இற்கு தரமுயர்த்தப்பட்ட ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை தாம் தரமுயர்த்தப்பட்ட பின்னர் விளையாடிய 20 வயதின் கீழ்ப்பட்ட அணிகளுக்காக ஆடிய முதல் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பதோடு, தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய சம்பியனாக மகுடம் சூடி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் மிகப் பெரும் கௌரவத்தினை சேர்த்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும் 

செய்தி உதவிஅர்சாட் அன்வர்டீன் 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<