திக்வெல்ல அரைச் சதமடிக்க; சகலதுறையிலும் பிரகாசித்தார் தனன்ஜய லக்ஷான் 

SLC Major Clubs T20 Tournament 2023

218
SLC Major Clubs T20 Tournament 2023

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற மேஜர் லீக் T20 தொடரின் அரை இறுதிப் போட்டிகள் இன்று (09) கொழும்பி பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றன.

இதில் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான முதலாவது அரை இறுதிப் போட்டியில் NCC கழகமும், Ace Capital கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான 2ஆவது அரை இறுதிப் போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகமும் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் NCC கழகம்

நிரோஷன் திக்கெல்ல மற்றும் சஹன் ஆரச்சிகேவின் அபார துடுப்பாட்டத்தின் உதவியால் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான முதலாவது அரை இறுதியில் 7 விக்கெட்டுகளால் NCC கழகம் அபார வெற்றயீட்டியது.

கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் இன்று (09) காலை நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற NCC கழகம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது

இதன்படி, முதலில் களமிறங்கிய முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களைக் குவித்தது அந்த அணி சார்பில் சொஹான் டி லிவேரா 37 ஓட்டங்களையும், ஜனிஷ்க பெரேரா 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

NCC இன் பந்துவீச்சில் அசேல் சிகேரா மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய NCC கழகம் 9.5 ஓவர்களில் 3 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அந்த அணியின் தலைவர் நிரோஷன் திக்வெல்ல 26 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்கால் 70 ஓட்டங்களையும், சஹன் ஆரச்சிகே 18 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இதன்படி, 7 விக்கெட்டுகளால் வெற்றயீட்டிய NCC கழகம் மேஜர் லீக் T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 131/5 (13) – சொஹான் டி லிவேரா 37, ஜனிஷ்க பெரேரா 28, பசிந்து சூரியபண்டார 28, அசேல் சிகேரா 1/12, லசித் எம்புல்தெனிய 1/13

NCC கழகம் – 138/3 (9.5) – நிரோஷன் திக்வெல்ல 70*, சஹன் ஆரச்சிகே 44, திலான் பரஷான் 3/19, மல்ஷ தருபதி 2/13, பிரவீன் ஜயவிக்ரம 2/17

முடிவு – NCC கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி 

 Ace Capital கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

தனன்ஜய லக்ஷானின் சகலதுறை ஆட்டத்தின் உதவியால் Ace Capital கழகத்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இறுதிப் போட்டித் தகுதி பெற்றது.

கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் இன்று (09) பிற்பகல் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய Ace Capital கிரிக்கெட் கழகம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களைக் குவித்தது.

அந்த அணிக்காக தனியொருவராகப் போராடிய பவன்த வீரசிங்க T20I போட்டிகளில் தனத முதல் அரைச் சதத்தைப் பதிவு செய்து 52 பந்துகளிவ் 72 ஓட்டங்களை எடுத்தார். இதில் 6 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் பந்துவீச்சில் தனன்ஜய லக்ஷான் 30 ஓட்டங்களுககு 4 விக்கெட்டுகளையும், உதித் மதுஷான் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 152 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

கோல்ட்ஸ் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்த தனன்ஜய லக்ஷான், 32 பந்துகளில் 51 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 27 பந்துகளில் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற மேஜர் லீக் T20 தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம் 

Ace Capital கிரிக்கெட் கழகம் – 147/8 (20) – பவன்த வீரசிங்க 73, சகுன லியனகே 20, தனன்ஜய லக்ஷான் 4/30, உதித் லக்ஷான் 2/29

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 152/5 (18.4) – தனன்ஜய லக்ஷான் 51, அஞ்செலோ மெதிவ்ஸ் 36, ஜெஹான் டேனியல் 23, சிதும் திஸாநாயக 2/29

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<