ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்த சென்னை சுபர் கிங்ஸ்

153

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை சென்னை சுபர் கிங்ஸ் 5 விக்கெட்டுக்களால் டக்வெத் லூயிஸ் முறையில் வீழ்த்தியிருப்பதோடு, ஐ.பி.எல். சம்பியன் பட்டத்தினையும் ஐந்தாவது முறையாக சுவீகரித்திருக்கின்றது.

>> கிரிக்கெட்டில் சாதிக்க பொறியியல் துறையை விட்ட ஆகாஷ் மத்வால்

IPL தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) ஒழுங்கு செய்யப்பட்ட போதும் குறித்த தினத்தில் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டியின் நேற்றைய (29) மேலதிக நாளில் அஹமதாபாதில் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுபர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பாடும் ஆட்டத்தினை குஜராத் டைடன்ஸ் அணிக்கு வழங்கியது. இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத் டைடன்ஸ் சாய் சுதர்ஷனின் அபார ஆட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை எடுத்திருந்தது.

குஜராத் அணியின் துடுப்பாட்டத்தில் சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 96 ஓட்டங்கள் பெற்று தனது சதத்தினை வெறும் 04 ஓட்டங்களால் தவறவிட்டதோடு, வ்ரித்திமான் சஹா 39 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

மறுமுனையில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் மதீஷ பத்திரன 02 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியில் மீண்டும் மழையின் குறுக்கீடு காணப்பட  போட்டியின் வெற்றி இலக்கு 15 ஓவர்களுக்கு 171 ஓட்டங்கள் என டக்வெத் லூயிஸ் முறையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுபர் கிங்ஸ் அணி குறித்த வெற்றி இலக்கை 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 171 ஓட்டங்களுடன் அடைந்தது.

சென்னை அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் டெவோன் கொன்வெய் 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்த சிவம் டூபே 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்தார்.

>> IPL தொடரிலிருந்து ஓய்வுபெறுகிறார் அம்பத்தி ராயுடு

குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில் மோஹிட் சர்மா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், நூர் அஹ்மட் 02 விக்கெட்டுக்களை சுருட்டியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக சென்னை சுபர் கிங்ஸ் அணியின் டெவோன் கொன்வேய் தெரிவாகினார். தொடர் நாயகன் விருது குஜராத் டைடன்ஸ் அணியின் துடுப்பாட்டவீரர் சுப்மான் கில்லிற்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

குஜராத் டைடன்ஸ் – 214/4 (20) சாய் சுதர்ஷன் 96(47), வ்ரித்திமான் சஹா 54(39), மதீஷ பத்திரன 44/2(4)

மும்பை இந்தியன்ஸ் – 175/5 (15) டெவோன் கொன்வெய் 47(25), சிவம் டூபே 32(21), மோஹிட் சர்மா 36/3(3), நூர் அஹ்மட் 17/2(3)

முடிவு – சென்னை சுபர் கிங்ஸ் 62 ஓட்டங்களால் வெற்றி

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<