இந்திய அணியில் ருதுராஜுக்குப் பதிலாக ஜெய்ஸ்வால்

173

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக மாற்று வீரராக இளம் துடுப்பாட்ட வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் கேஎல் ராகுல், ரிஷப் பாண்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயஸ் அய்யர், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு மிகப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

எனவே இந்திய அணியில் பல முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளதால் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மேலதிக வீரர்களாக இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இணைத்துக்கொள்ள இந்திய தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஜூன் 3ஆம் திகதி தனக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும், இதனால் இந்திய அணியுடன் இங்கிலாந்திற்கு பயணம் செய்ய முடியாது என்றும் ருதுராஜ் கெய்க்வாட் BCCIஇற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக மாற்று வீரராக, நடப்பு IPL தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கான பயிற்சியை உடனடியாக ஆரம்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

நடப்பு IPL தொடரில் 14 லீக் போட்டிகளில் விளையாடிய ஜெய்ஷ்வால், ஒரு சதம் உட்பட, 625 ஓட்டங்களைக் குவித்தார். அதேபோல, மும்பையைச் சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் நடப்பாண்டு துலீப் கிண்ணத் தொடரில் அடுத்தடுத்து இரண்டு இரட்டைச் சதங்களை அடித்து அசத்தினார்.

அதைதொடர்ந்து, விஜய் ஹசாரே கிண்ணத் தொடரில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 154 பந்துகளில் 203 ஓட்டங்களைக் குவித்தார். அத்தோடு, இரானி கிண்ணத்தில் மத்திய பிரதேச அணிக்கு எதிராகவும் அதிரடியாக ஒரு இரட்டைச் சதம் விளாசினார். இதனிடையே, அந்தத் தொடரில் ஒருசில சதங்களையும் அடித்து அசத்தினார். இந்த அபாரமான போர்மை இம்முறை IPL தொடரிலும் தொடர்ந்த அவர், மும்பை அணிக்கு எதிராக 62 பந்துகளில் 124 ஓட்டங்களைக் குவித்தார்.

எதிர்வரும் 7ஆம் திகதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக விராத் கோஹ்லி உள்ளிட்டோர் ஏற்கனவே அங்கு சென்றுள்ளனர். இதையடுத்து, அணித்தலைவர் ரோஹித் சர்மா உள்ளிட்டோருடன் ஜெய்ஷ்வாலும் விரைவில் இங்கிலாந்து புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<