LPL தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிப்பு

236

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் நான்காவது அத்தியாயத்துக்கான அங்குரார்ப்பண வீரர்கள் ஏலம் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மொத்தம் 5 அணிகள் பங்குபற்றும் 4ஆவது LPL தொடர் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கடந்த 3 அத்தியாயங்களிலும் அணி முகாமைத்துவங்களினால் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இம்முறை முதல் தடவையாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அணி முகாமைத்துவங்களால் ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர். இதன்மூலம் இந்தியன் பிரீமியர் லீக், SA20 லீக் மற்றும் மகளிருக்கான பிரீமியர் லீக் ஆகிய தொடர்களுக்குப் பிறகு ஏலத்தின் மூலம் வீரர்கள் தெரிவு செய்யப்படுகின்ற 4ஆவது T20 லீக் தொடராக LPL தொடர் இடம்பிடிக்கவுள்ளது.

இதன்படி, இம்முறை LPL தொடரில் வீரர்களை இரண்டு கட்டங்களாக வாங்குவதற்கு ஒவ்வொரு உரிமையாளர்களுக்கும் தலா 10 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது இலங்கை பணப்பெறுமதியில் 30 கோடி ரூபாவாகும்.

முதல் கட்டமாக முன்கைச்சாத்திடல் மூலம் ஒவ்வொரு அணியும் 2 சர்வதேச வீரர்களையும் 2 உள்ளூர் வீரர்களையும் 5 அணிகளும் வாங்கியுள்ளன. இதன்படி, 5 அணிகளாலும் இதுவரை 20 வீரர்கள் முன்கைச்சாத்திடப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டமாக ஏலம் மூலம் வீரர்கள் வாங்கப்படவுள்ளனர். இதற்காக 500க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களைப் பதிவுசெய்துகொண்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலம் மூலம் ஒவ்வொரு அணிகளாலும் இந்த வீரர்கள் வாங்கப்படவுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய தேசிய வீரர்கள், தேசிய அணியில் இடம்பெறாமல் முதல்தர அல்லது தொழில்முறை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்கள், முன்னாள் தேசிய வீரர்கள் என மூன்று வகை கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தின் மூலம் எடுக்கப்படவுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்த பட்சம் 6 வெளிநாட்டு வீரர்களும் 19 உள்நாட்டு வீரர்கள் இடம்பெறவேண்டும்.

இதுதவிர, இந்த ஆண்டு முதல் அணிக்கு உள்வாங்கப்படும் வீரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<