சர்வதேச கிரிக்கெட் விதிமுறையில் புதிய மாற்றம்

International Cricket Council

2170

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது கள நடுவர் வழங்கும் சொப்ட் சிக்னல் (Soft Signal) ஆட்டமிழப்பு முறைமையை நீக்குவதற்கான தீர்மானத்தை ஐசிசி மேற்கொண்டுள்ளது.

இவ்வருடம் லண்டனில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது, இந்த விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>> விதுசனின் அபார பந்துவீச்சுடன் மீண்டும் ஜப்பானை வீழ்த்திய இலங்கை!

கிரிக்கெட் போட்டியொன்றின்போது ஆட்டமிழப்பு ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டால், கள நடுவர்கள் இருவரும் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பினை மூன்றாவது நடுவருக்கு வழங்குவர்.

எனினும் குறித்த சந்தர்ப்பத்தில் உறுதியாக ஆட்டமிழப்பு தொடர்பில் அறிந்திருக்காவிடினும் கள நடுவர்கள் இருவரும் ஆட்டமிழப்பா? இல்லையா? என்பது தொடர்பிலான சொப்ட் சிக்னல் ஒன்றை மூன்றாவது நடுவருக்கு அறிவிப்பர்.

அதன் பின்னர் தொழிநுட்பங்களை பயன்படுத்தி ஆட்டமிழப்பை ஆராயும் மூன்றாவது நடுவர், இறுதி தீர்மானத்தை எடுப்பார். மூன்றாவது நடுவருக்கும் ஆட்டமிழப்பில் சந்தேகங்கள் இருந்தால் கள நடுவர்கள் வழங்கிய சொப்ட் சிக்னலின் அடிப்படையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

குறிப்பிட்ட இந்த சொப்ட் சிக்னல் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் வெளியாகியிருந்த நிலையில், அதனை நீக்குவதற்கும், முழுமையான தீர்மானத்தை மூன்றாவது நடுவர் எடுப்பதற்குமான வகையில் விதிமுறை மாற்றியமைக்கப்படவுள்ளது.

அதுமாத்திரமின்றி டெஸ்ட் போட்டிகளின் போது போதிய வெளிச்சமின்மை (Bad light) காரணமாக போட்டிகள் நிறுத்தப்படுவதை தவிர்ப்பதற்கு மைதானத்தில் உள்ள மின் விளக்குகளை ஒளிரச்செய்ய முடியும் என்ற விதிமுறையையும் ஐசிசி வெளியிடவுள்ளது.

அதேநேரம், குறித்த இந்த இரண்டு விதிமுறைகளுக்குமான அனுமதியை சௌரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<