கால்பந்தில் ஆரம்பித்து ஜப்பான் வரை கிரிக்கெட் சுற்றுலா செய்த தீசன்

266

ஜப்பானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்து 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடவுள்ள இலங்கை வளர்ந்துவரும் வீரர்கள் அணியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முன்னாள் வீரர் தீசன் விதுஷன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையினால் அண்மையில் நடத்தப்பட்ட 23 வயதின் கீழ் முன்னணி கழக அணிகளுக்கு இடையிலான 2 நாட்கள் கிரிக்கெட் தொடரில் கொழும்பு முவர்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றிய ஒருவர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சாளர் தீசன் விதுஷன். குறிப்பாக, இந்தத் தொடரில் 4 லீக் போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த தீசன் விதுஷன் தொடரின் அதிசிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை வென்றெடுத்தார்.

புளூம்பீல்ட் கழகத்துக்கு எதிராக 27 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே குறித்த போட்டித்தொடரில் அவரது சிறந்த பந்துவீச்சுப் பிரதியாகும். அதேபோல, குறித்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய விதுஷன் 89 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். மேலும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் போட்டித்தொடரொன்றில் விதுஷன் வெளிப்படுத்திய உச்சபட்ச திறமையும் இதுவாகும்.

மேலும், அவர் கோல்ட்ஸ் கழக்துக்கு எதிராக 53 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், இறுதிப் போட்டியில் ராகம கழகத்துக்கு எதிராக 102 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவ்வாறு வெளிப்படுத்திய திறமையின் காரணமாகவே 23 வயதின் கீழ்ப்பட்ட வீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட முன்னணி கழக கிரிக்கெட் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக தீசன் விதுஷன் தெரிவாகினார்.

இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரிலும் திறமைகளை வெளிப்படுத்திய விதுஷன், 6 போட்டிகளில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல, குறித்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

எனவே, அந்த தொடரில் வெளிப்படுத்திய திறமையின் காரணமாக முதல்தரப் போட்டிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு, 8 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய அவர் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியிருற்தார்.

>> இலங்கை U23 அபிவிருத்தி குழாத்தில் இடம்பிடித்த தீசன் விதுசன்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து கிரிக்கெட் அரங்கிற்கு பிரவேசித்த 21 வயதான விதுஷன், கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கான ஆடி வருகின்றார். அதேபோல, கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

‘முவர்ஸ் கழகத்தில் உள்ள ஒவ்வொரு வீரரும் எனக்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர். போட்டிகளைப் போலவே பயிற்சியிலும் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையால் இந்தளவு தூரத்திற்கு வர முடிந்தது. அதுதொடர்பில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என ThePapare.com இணையத்தளத்துக்கு தீசன் விதுஷன் வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

”முதல்தர கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசையில்தான் நான் கொழும்புக்கு வந்தேன். மிகவும் குறுகிய காலத்தில் முதல்தரப் போட்டிகளில் விளையாடக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோன்று, கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்கில் ஜப்னா கிங்ஸ் அணியுடன் இணையும் வாய்ப்பும் கிடைத்தது.

அதேபோல, என்னிடம் இருக்கின்ற திறமையில் எனக்கு நம்பிக்கையை அளித்தது முவர்ஸ் விளையாட்டுக் கழகம் தான். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த எனக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து எனக்கு நிறைய உதவிகளை செய்து வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரும் விதுஷன் முதலில் பயிற்சிகளுக்காக கொழும்பில் உள்ள முன்னணி விளையாட்டுக் கழகமொன்றில் இணைகிறார். ஆனால் அங்கு அவரது திறமை நிராகரிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் மூவர்ஸ் விளையாட்டுக் கழகத்தில் இணைகிறார்.

‘நான் அயன சிரிவர்தன மூலம் தான் மூவர்ஸ் விளையாட்டுக் கழகத்தில் இணைந்தேன். ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரவீன் ஜெயவிக்ரமவிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவ்வாறே பயிற்றுவிப்பாளர் சாமர கபுகெதரவும் எதிர்பாராதவிதமாக எனது திறமைகளை வெளிக்கொண்டுவர உதவி செய்தார். பசிந்து சூரியபண்டாரவும் எனது திறமைகளுக்கு ஆலோசனைகளை வழங்குகின்றார். அவர்களின் ஆதரவு எனக்கு பெரும் பலமாக உள்ளது’ என்றார்.

>> இலங்கை ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறுவது சாத்தியமா? | Sports RoundUp – Epi 230

யாழ் மத்திய கல்லூரிக்கும், புனித ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த வடக்கின் பெரும் கிரிக்கெட் சமரின் மூலம் தான் எதிர்பாராதவிதமாக விதுஷன் கிரிக்கெட் களத்தில் பிரவேசிக்கிறார்.

‘ஆரம்ப காலத்தில் எனது விளையாட்டு கால்பந்து. ஆனால் வடக்கின் பெரும் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்திருந்தவர்களின் உற்சாகமும், அவர்கள் முன்னால் ஹீரோவாகிவிட்ட வீரர்களையும் பார்த்த போது தான் எனக்கும் இப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே ஆண்டில், நான் பாடசாலையில் 15 வயதுக்குட்பட்ட அணியில் சேர்ந்தேன்.”

கடந்த 2016ஆம் ஆண்டு விதுஷன் யாழ். மத்திய கல்லூரியின் 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் இணைகிறார். அந்த வயதில் அது விதுஷனின் கடைசி ஆண்டு. அந்தப் பருவகாலத்தின் முடிவில், விதுஷன் 23 போட்டிகளில் ஆடி 73 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்த ஆண்டில் 17 வயதுக்குட்பட்ட அணியில் முதலாவது ஆண்டில் விளையாடும் விதுஷன் 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும், அதற்கு அடுத்த ஆண்டில் 21 போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த திறமைகளால் விதுஷன் தனது கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்.

”2019இல் எனது நீண்ட நாள் கனவாக இருந்த வடக்கின் பெரும் கிரிக்கெட் சமரில் விளையாடுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் குறித்த பருவத்தில் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் 18 போட்டிகளில் ஆடி 108 விக்கெட்டுகளை வீழ்த்திய என்னால், முதலாவது பெரும் கிரிக்கெட் சமரில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. இது என்னால் மறக்க முடியாத அனுபவம்.”

அது விதுஷனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும், அவர் அதே ஆண்டு வட மாகாணத்தின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை தட்டிச் சென்றார். இதனால் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்ட Super Provincial போட்டித்தொடரில் விளையாடுகின்ற வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார்.

அடுத்த ஆண்டும் மீண்டும் அதே அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வாய்ப்பைப் பெறும் விதுஷன், தனது பாடசாலை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 12 போட்டிகளில் ஆடி 99 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆத்துடன், அந்த ஆண்டு நடைபெற்ற வடக்கின் பொரும் கிரிக்கெட் சமரிலும் விதுஷன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அன்றிலிருந்து கொழும்பு மாநகரில் தான் தீசன் விதுஷனின் திறமைகள் வெளிவர ஆரம்பித்தன.

‘எனது கனவை நிறைவேற்ற கொழும்புக்கு வர வேண்டும் என்ற எண்ணம் பாடசாலைக்காக விளையாடிய கடைசி சில ஆண்டுகளில் எனது உள்ளத்தில் தோன்றியது. வீட்டில் கூட அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால், உடனடியாக யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்புக்கு வருவதற்கு எனது மனம் இடம்கொடுக்கவில்லை’.

விதுஷனின் தந்தையின் பெயர் நடராஜா நிஷன். முழுநேர விவசாயம் செய்பவர். அவரிடம் ஒரு பண்ணையும் உள்ளது. தாய் ஆர். ராஜேஸ்வரி. கனவரின் விவசாய வேலைக்கு உதவுவதோடு, பிள்ளைகளையும் கவனித்து வருகிறார்.

விதுஷனுக்கு இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர். மூத்த தம்பி மதுமிதனுக்கு 16 வயது. இளையவன் சஞ்சய். இருவரும் கால்பந்தாட்டத்தில் திறமையானவர்கள்.

‘வீட்டுச் சூழல். எனது அம்மா, அப்பா மற்றும் இரண்டு சகோதரர்களை விட்டு கொழும்புக்கு வர எனக்கு மனமில்லை. சுமார் ஒரு ஆண்டு இப்படித்தான் இருந்தது. என்னால் முடிந்தவரை கிரிக்கெட் விளையாடினேன். அப்படி விளையாடும் போது நண்பர்கள் கூட என்னிடம் ஏன் கொழும்பு சென்று கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று கேட்டார்கள்’.

எனினும், ஓராண்டுக்குப் பிறகு கொழும்பு வருகை தந்த தீசன் விதுஷனுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.

>> வேகப் பந்துவீச்சில் தடம்பதித்து சுழல் பந்தில் சாதித்த பிரவீன் ஜயவிக்ரம

‘யாழ்ப்பாணத்தில் பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் போதுமானதாக இல்லை. மற்றொன்று, கொழும்பைப் போன்று கழக மட்ட கிரிக்கெட் கிடையாது. அங்குள்ள மைதானங்களின் நிலையும் இங்கு இல்லை. எமது வீரர்கள் பெரும்பாலானோர் மெட்டின்களில் விளையாடுகிறார்கள். கொழும்புக்கு நிகரான வசதிகள் இருந்தால் இலங்கை அணிக்காக விளையாடும் அளவுக்கு திறமையான வீரர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளனர்’ என்றார்.

அவையனைத்துக்கும் மேலாக யாழ்ப்பாணத்தின் பொருளாதார நிலையும் அப்பகுதியில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம் என்கிறார் விதுசன்.

‘என்னுடைய திறமையில் பலர் என்னை நம்பியுள்ளனர். அதனால் தான் கிரிக்கெட்டில் நீண்ட தூரம் செல்ல முடியும் என்ற எண்ணம் எனது உள்ளத்தில் ஏற்பட்டுள்ளது. படிப்படியாக முன்னேறி கிரிக்கெட்டில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும். என்றாவது ஒருநாள் நான் இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட வேண்டும் என்பது தான் எனது ஒரே ஆசையும் நம்பிக்கையும் ஆகும்’ என்று அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து முன்னணி கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி ஜப்பான் அணிக்கெதிராக நடைபெறவுள்ள T20 தொடருக்கான இலங்கை வளர்ந்துவரும் அணியில் தீசன் விதுஷன் முதல் தடவையாக இடம்பிடித்துள்ளார்.

விஜயகாந்த் வியாஸ்காந்துக்குப் பிறகு அதிகளவில் பேசப்படுகின்ற வீரராக மாறியுள்ள தீசள், ஜப்பான் சுற்றுப்பயணத்தில் பிரகாசித்து மிக விரைவில் இலங்கை கிரிக்கெட் அணியில் வாய்ப்பை பெற வேண்டும் என ThePapare,com இன் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<