இலங்கையின் உலகக் கிண்ண கனவை தக்க வைத்த ஆர்ச்சரின் அபார பந்துவீச்சு

2118

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று (02) நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா அணிக்கு ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக்கிற்கான புள்ளிப்பட்டியலில் இருந்து ஒரு புள்ளியைக் குறைக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தென்னாப்பிரிக்கா அணி நேரடியாக தகுதி பெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தைப் பிடித்து இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதி பெறும் கடைசி அணிக்காக மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகள் இடையே பலத்த போட்டி நிலவி வருகின்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி 24 போட்டிகளில் விளையாடி 88 புள்ளிகளுடன் 8ஆவது இடத்துடன் சுபர் லீக் தொடரை நிறைவு செய்தது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை 2க்கு 0 என தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றியதை அடுத்து அந்த அணி 79 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தைப் பிடிக்க, 77 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி 10ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.

இதன் காரணமாக இலங்கை அணிக்கு இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெறுவது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருந்தது.

எவ்வாறாயினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கிம்பர்லியில் நேற்று (03) நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான ஒருநாள் போட்டியில் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்று இங்கிலாந்து அணி இழந்தாலும் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் 6 வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மீள் வரவை ஜொப்ரா ஆர்ச்சர் சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்.

எனவே, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றினாலும் கடைசி ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவி இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதியை பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

அதாவது 3ஆவது ஒருநாள் போட்டியில் குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாததால் அந்த அணி வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் புள்ளிப்பட்டியில் இருந்து ஒரு புள்ளியை இழக்கவும் நேரிட்டுள்ளது. இதன் காரணமாக, முன்னர் 79 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி ஒரு புள்ளியை இழந்து தற்போது 78 புள்ளிகளுடன் உள்ளது

ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் போட்டி அட்டவணையின் படி தென்னாப்பிரிக்கா அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. இந்த 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியீட்டினால் 98 புள்ளிகளை எடுத்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தைப் பிடித்து ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும். இதனால் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 2 அணிகளுக்கு தகுதிகாண் சுற்றில் விளையாட நேரிடும்.

எவ்வாறாயினும், இலங்கை அணிக்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. நியூசிலாந்தில் நடைபெறவுள்ள இந்த 3 போட்டிகளிலும் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றியீட்டினால் இலங்கை அணி 107 புள்ளிகளை எடுத்து 8ஆவது அணியாக உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதி பெறும். அதேபோல, இலங்கை அணி ஒரு வெற்றி பெற்று, 2 போட்டிகள் மழையால் முடிவு இன்றி நிறைவடைந்தாலும் இலங்கைக்கு நேரடி தகுதியைப் பெற்றுவிடும் அல்லது இலங்கை அணி 2 போட்டிகளில் வெற்றியீட்டி, ஒரு போட்டி மழையால் முடிவு இன்றி முடிவடைந்தாலும், புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களுக்குள் நுழைந்து உலகக் கிண்ணத்துக்கு இலங்கை அணி நேரடி தகுதி பெறலாம். ஆனால், நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இலகுவான விடயமல்ல.

இதனிடையே, இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றால் இலங்கை அணி 97 புள்ளிகளை மாத்திரமே பெற முடியும் என்பதால் தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய இரு அணிகளும் இலங்கையை பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

எவ்வாறாயினும், நியூசிலாந்து தொடரில் இலங்கை ஒரு போட்டியில் கூட தோல்வியடைந்தால், மற்ற போட்டிகளின் முடிவுகள் தமக்கு சாதகமாக முடிவடையும் வரை இலங்கை அணி காத்திருக்க வேண்டும்.

மறுபுறத்தில், நெதர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா அணி 1-1 என்று சமநிலை செய்தால் தென்னாப்பிரிக்கா அணி மேற்கிந்திய தீவுகளுடன் 88 புள்ளிகளை எடுத்து சம இ;டத்தைப் பிடிக்கும். அப்போது நிகர ஓட்ட விகிதம் பரிசீலிக்கப்படும்.

அத்துடன், 68 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் உள்ள அயர்லாந்து அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றியீட்டினால் தென்னாப்பிரிக்காவின் 98 புள்ளிகளை எட்டிப் பிடிக்கும். இதனால் இரு அணிகளுக்கும் நிகர ஓட்ட விகிதம் பரிசீலிக்கப்படும்.

எனவே, மேலே குறிப்பிட்ட விடயங்கள் இடம்பெறாவிட்டால் இலங்கை அணிக்கு ஜிம்பாப்வேயில் எதிர்வரும் ஜுன் மாதம் 10 அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாட நேரிடும்.

ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் 13 நாடுகளை உள்ளடக்கியது, இதில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும். மாறாக கடைசி 5 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜிம்பாப்வேயில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றுப் போட்டியில் விளையாட வேண்டும். இந்த தகுதிகாண் சுற்றில் ஐசிசியில் முழு உறுப்பினர்களாக இல்லாத மற்ற 5 நாடுகளும் விளையாடும், அந்தப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே இந்த  ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>