ஹிமாஷ ஏஷானின் போட்டித் தடை மேலும் நீட்டிப்பு

95

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள் போட்டித் தடையை ஏற்கனவே சந்தித்துள்ள ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் முன்னாள் தேசிய சம்பியனான ஹிமாஷ ஏஷானுக்கு விதிக்கப்பட்ட தடையை ஆறு ஆண்டுகளாக நீட்டிக்க இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தடை தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) குற்றஞ்சாட்டப்பட்ட வீரருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சீவலி ஜயவிக்ரம மற்றும் அதன் சட்ட அதிகாரி மற்றும் பணிப்பாளர் சபை செயலாளர் டி.என்.ஏ.எஸ். மல்லவாராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் கடிதத்தில், குறித்த தடைக்காலத்தில் அனைத்து வகையான விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை தவிர்க்குமாறும் ஹிமாஷ ஏஷானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் குறுந்தூர வீரர் ஹிமாஷவுக்கு 4 ஆண்டுகள் தடை

கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி நாரஹேன்பிடியவில் உள்ள இலங்கை இராணுவ குடியிருப்பு வளாகத்தில் வைத்து எடுக்கப்பட்ட ஹிமாஷவின் சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து அவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

இதனையடுத்து ஹிமாஷாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் திகதி ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டதுடன், குறித்த விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபணமாகியது.

இதன்படி, உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் மற்றும் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் விதிகளின்படி, 2021 ஒக்டோபர் 26 முதல் 2025 ஒக்டோபர் 25ஆம் திகதி வரை ஹிமாஷவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், அதில் திருப்தி அடையாத ஹிமாஷ ஏஷான், 2013 இலக்கம் 33 என்ற ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்தின் உப பிரிவு 26 (1) (அ) இன் கீழ் பெறப்பட்ட அதிகாரத்தின் கீழ் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் மேல்முறையீட்டு சபையில் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

அதன்படி, உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் (WADA) ஆதரவுடன் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் முடிவு குறித்து ஹிமாஷ ஏஷானுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே இந்த தடை நீட்டிப்பின் பிரகாரம், அவரது போட்டித் தடை 2027 ஒக்டோபர் 25ஆம் திகதி வரை செல்லுபடியாகும்.

தற்போது 27 வயதாகும் ஹிமாஷ ஏஷானின் போட்டித் தடை நிறைவுக்கு வரும் போது 32 வயதை நெருங்கி விடும் என்பதால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <