Monday 23 January 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (1 / 14)

 


மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 1 : புறப்பாடு

 மேல் மாடியில் தனது அறைக்குள் நின்றபடி ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் அவள். வானம் கருகருவென்று இருட்டி இருந்தது.

 ’மகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வரும்போது வானம் இப்படி இருக்கவில்லையே!’

 திடீரென்று வானம் கோபம் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. வெப்பமாக வீசிய காற்று ஒடுங்கிவிட, மின்னல் ஒன்று வரிஞ்சு கட்டி வீட்டின் மேலால் ஓடி ஒளிந்தது. சடசடத்துப் பெய்த மழையினால் புழுதி அடங்க, மண் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாகத் தேய்த்துக் கொண்டாள். காலநிலைக்குத் தகுந்தால் போல் உடைகளை அணிந்து கொண்டாள். சிறிதாக மேக்கப் போட்டுக் கொண்டாள்.

 பக்கத்து அறையைத் திறந்து எட்டிப் பார்த்தாள். அது அவளின் கணவனின் படுக்கை அறை. எல்லாப் பொருட்களும் போட்டது போட்டபடி கன்னாபின்னாவென்று சிதறிக் கிடந்தது. உள்ளே போகவில்லை. வெளியே நின்று பார்த்துவிட்டு கதவை இழுத்து மூடினாள். வேலை நாட்களில் அவள் அந்த அறைக்குள் போவதில்லை. அப்படியே கணவனும் இவளது அறைக்குள் வருவதில்லை. நேரில் பார்த்துக் கதைப்பதற்கு நேரமில்லை. ஒருவரோடு ஒருவர் கதைத்துப் பேச எங்கே நேரம்? ரெலிபோனில் சிலவேளைகளில் கதைப்பாள். எல்லாமே வார இறுதியில்தான் குடும்பம், கொண்டாட்டம்.

 இருவரும் கார் உற்பத்தித் தொழிற்சாலையில் வேலை செய்கின்றார்கள். ஆனால் வேறு வேறு பகுதிகள். ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்---இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை---கொண்டுள்ளது இவர்கள் வேலை செய்யும் கார் உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். கணவன் பகல் வேலை, அசெம்பிளிப் பகுதியில் இயந்திரப் பொறியியலாளராக இருக்கின்றான். மனைவி இரவு வேலை, கார் உற்பத்திப் பகுதியான பெயின்ற் ஷொப்பில்.

 ‘இன்று வேலையால் வருவதற்குப் பிந்தும்’ என ரெக்ஸ் மெசேஜ் போட்டிருந்தான் கணவன்.

தனது பாக்கைத் தூக்கிக் கொண்டு படிகளினின்றும் வேகமாகக் கீழ் இறங்கினாள். டைனிங் றூமில் மகள் பாடசாலை முடித்து வந்து உணவருந்திவிட்டு, பள்ளிப் புதினங்களைத் தன் தம்பியுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். மகள் மூத்தவள், எட்டு வயது, ஒல்லிப்பித்தான், நெட்டை, அம்மாவைப்போல. பையன் மூன்று வயது, சளுக்கையன், கட்டை, அப்பாவைப் போல. இன்னும் பள்ளிக்குப் போகத் தொடங்கவில்லை. தனக்குத் தேவையான இரவு உணவு, மற்றும் smoko நேரத்தில் கொறிப்பதற்கு சில தின்பண்டங்கள் எடுத்துக் கொண்டாள். பிள்ளைகளுக்கு ’பாய்’ சொல்லிவிட்டு கார் நிற்குமிடம் பரபரக்க ஓடினாள்.

 வானம் மீண்டும் பல்லிளித்தது கண்டு கோபமுற்றாள். திரும்பவும் வீட்டிற்குள் ஓடினாள். படிகளின் மீது தாவித் தாவி ஏறினாள். பிள்ளைகள் அம்மாவை வினோதமாகப் பார்த்தார்கள். ஐந்து நிமிடத்தில் ஆள் முக்கால்வாசி, ஆடை கால்வாசியாக ’சமர்’ உடுப்புடன் மீண்டும் விரைந்து காரிற்குள் ஏறினாள்.

 “அம்மாவைப் பார்க்க சினிமாக்காரி போல இருக்கின்றா” மகள் ஆங்கிலத்தில் சொல்லிச் சிரித்தாள்.

 ’மெல்பேர்ண் வெதர்’ என்ன செய்யும் ஏது செய்யும் என்று ஒருவராலும் தீர்க்கமாகச் சொல்லமுடியாது. காலநிலை அவதான நிலையத்திற்கே காதிலை பூ வைக்கும். சோவென மழை பொழியும், அப்புறம் படீர் என வெய்யில் அடிக்கும். சூறாவளி போலக் காற்று சுழன்றடிக்கும், அப்புறம் ஒன்றுமே நடக்காதது போல சாந்தமே உருவாகச் சுற்றாடல் இருக்கும்.

 காரிற்குள் ஏறிவிட்டால் போதும், தனக்கே வீதி என்பதுமாப்போல் காரை ஓட்டத் தொடங்கி விடுவாள் அவள். வேகமாக வெட்டி வெட்டி ஓடுவதில் ஒரு அலாதிப் பிரியம். எத்தனையோ தடவைகள் வேகமாக ஓடியதற்காக தண்டப்பணம் செலுத்தியிருக்கின்றாள், புள்ளிகளை இழந்திருக்கின்றாள். அவை எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டல்ல. அதையே பெருமையாக எண்ணுவாள், எல்லாருக்கும் சொல்லித் தம்பட்டம் அடிப்பாள்.

 மணிக்கு அறுபது கிலோமீட்டர்கள் ஓடிய பாதை, சுக்கா சுக்கா என்று வாகனங்கள் ஓடும் ஃபிறீவேயில் ஏறியதும் - திடீரென்று ’ஸ்னைப்பர் அற்றாக்’ போல மழை எங்கிருந்தோ அடிக்க ஆரம்பித்தது. ஃபிறீவே எங்கும் மழை வெள்ளம் ஃபிறீயாகப் பாய்ந்தது. வின் ஸ்கீரீன் ஊடாக எதையுமே அவளால் பார்க்க முடியவில்லை. ஸ்ராட் மியூசிக் என்று எவருமே சொல்லாமல் எல்லா வாகனங்களும் மின்னி முழங்கின. அவள் தனக்குள் கெட்ட வார்த்தைகளினால் திட்டத் தொடங்கினாள். பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று அடிபட்டு முக்கி முனகி நின்றன. பாதையின் இருமருங்கும் வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.

 வேலை தொடங்குவதற்கான மணியின் சத்தம் அவளுக்குக் கேட்டது. ’பெயின்ற் ஷொப்’ PAINT SHOP அவளை வரவேற்றது. இந்தப் பெயின்ற் ஷொப்பில் ஆறு குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குறூப் லீடர், இரண்டு ரீம் லீடர்கள், இருபது தொழிலாளர்கள் என இருப்பார்கள்.

 தினமும் வேலை ஆரம்பிக்க முன்னதாக ஒரு சிறு எக்‌ஷசைஸ், பின் ஐந்து நிமிடக் கூட்டம் நடக்கும். உடற்பயிற்சி முடிந்து கூட்டம் தொடங்குகையில் வேர்க்க விறுவிறுக்க எல்லார் பின்னாலும் மெதுவாக வந்து நின்றாள் அவள். குறூப் லீடர் மக்காறியோ தன் கடைக்கண்ணால் அவளைப் பார்த்தான். அவள் சிறிது புன்முறுவல் செய்தாள். அவனுக்கும் இதழோரம் சிரிப்பு வந்தது.

 பிறைமரில் வேலை செய்யும் அத்தனை பேரும் அந்த ‘அழகான பெண்ணைப்’ பார்த்தார்கள். அவள் ஒருத்திதான் அந்தக் கூட்டத்தினுள் அழகு.

 தொடரும்….

No comments:

Post a Comment