அவுஸ்திரேலிய அணியிலிருந்து வெளியேறும் ஸ்டொயினிஸ்!

West Indies tour of Australia 2022

5024

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான குழாத்திலிருந்து அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொயினிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

மார்கஸ் ஸ்டொயினிஸ் செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது, பக்க திரிபு உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். இதன்காரணமாக குறித்த தொடரின் மூன்றாவது போட்டியிலிருந்து வெளியேறியிருந்தார்.

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி பலமானதா? இல்லையா?

குறிப்பிட்ட இந்த உபாதையிலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், அவர் அவுஸ்திரேலிய அணியுடன் கோல்ட் கோஸ்ட்டுக்கு பயணிக்கவில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. மே.தீவுகளுக்கு எதிரான முதல் T20I போட்டி புதன்கிழமை (06) ஆரம்பிக்கவுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெறவுள்ள தொடரையடுத்து, அவுஸ்திரேலிய அணி பேர்த் நகரத்துக்கு பயணித்து, இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கு தயாராகவுள்ளது. அதனைத்தொடர்ந்து உலகக்கிண்ணத்துக்கு தயாராகும் அவுஸ்திரேலிய அணி பயிற்சிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

மார்கஸ் ஸ்டொயினிஸ் தொடர்ந்தும் பேர்த்தில் தங்கியிருக்கவுள்ளதுடன், வார இறுதியில் அவுஸ்திரேலிய அணியுடன் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் T20 உலகக்கிண்ண குழாத்தில் இடம்பெற்றுள்ள இவர், இறுதியாக நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான தொடரை தவறவிட்டிருந்ததுடன், தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரையும் தவறவிட்டுள்ளார்.

மார்கஸ் ஸ்டொயினிஸ் அணியில் இல்லாத காரணத்தால், இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய கெமரூன் கிரீன் மற்றும் டிம் பெய்ன் ஆகியோருக்கு மேற்கிந்திய தீவுகள் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் ஐசிசியின் அறிவிப்பின்படி, T20 உலகக்கிண்ணத் தொடருக்கான உபாதை மாற்றீடு வீரர்களை, முதல் சுற்றில் விளையாடும் அணிகள் 9ம் திகதியும், சுபர் 12 சுற்றில் விளையாடவுள்ள அணிகள் 15ம் திகதிக்கு முன்னரும் அறிவிக்கவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<