புனித பத்திரிசியார், களுத்துறை முஸ்லிம், ஸாஹிரா அணிகள் இலகு வெற்றி

867

Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 தொடரில் தமது முதல் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணிகள் இலகுவான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

புனித பத்திரிசியார் கல்லூரி எதிர் தேர்ஸ்டன் கல்லூரி

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (1) இடம்பெற்ற இந்தப் போட்டியில் பலம் மிக்க புனித பத்திரிசியார் கல்லூரியை, தொடரில் புதிதாக இணைந்த தேர்ஸ்டன் வீரர்கள் எதிர்கொண்டனர்.

ஆட்டத்தின் ஆரம்பம் முதல் கோல் மழை பொழிய ஆரம்பித்த புனித பத்திரிசியார் வீரர்கள் முதல் பாதியில் 5 கோல்களைப் பெற்றனர். தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் அவ்வணியினர் மேலும் 4 கோல்களைப் பெற்றனர். இதன்போது, ஜெரோம் மொத்தமாக 6 கோல்களை தனது கல்லூரி அணிக்காக போட்டமை குறிப்பிடத்தக்கது.

எனவே, போட்டி நிறைவில் 9-0 என புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் அபார வெற்றி பெற்றனர்.

முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 9 – 0 தேர்ஸ்டன் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரி – ரோஹிம் 8’, ஜெரோம் 17’,39’,45’,80’,82’&90’ கிஷான்த் 26’, லியோ 49’

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி எதிர் பதுரிய கல்லூரி

சனிக்கிழமை களுத்துறை வெர்னண் பெர்னாண்டோ அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முழு ஆதிக்கமும் சொந்த மைதான வீரர்கள் பக்கம் இருந்தது.

முதல் பாதியில் களுத்துறை வீரர்களுக்கு கோலுக்கான அதிகமான வாய்ப்புக்கள் கிடைத்தாலும், அவ்வணியின் முன்கள வீரர்கள் மிகவும் அதிகமாக ஓப் சைட் முறையில் விளையாடியமையினால், அவர்களால் கோல்களைப் பெற முடியாமல் போனது. எனினும் முதல் பாதியில் 3 கோல்களைப் பெற்ற அவ்வணியினர் இரண்டாம் பாதியில் மேலும் இரண்டு கோல்களைப் பெற்றனர்.

மறுமுனையில் பதுரியா அணி சார்பாக இரண்டாம் பாதியில் மொஹமட் ஹஜீல் மூலம் ஒரு கோல் மாத்திரம் பெறப்பட்டது.

எனவே, போட்டி நிறைவில் 5-1 என களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி இலகுவாக வெற்றி பெற்று, தொடரை சிறப்பாக ஆரம்பித்தது.

முழு நேரம்: களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 5 – 1 பதுரிய கல்லூரி

கோல் பெற்றவர்கள்

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி – மொஹமட் அம்மார் 31’ & 70’, மொஹமட் சியாப் 36’, மொஹமட் வசீம் 43’, மொஹமட் பர்ஹான் 52’,   

பதுரிய கல்லூரி – மொஹமட் ஹஜீல் 53’

கொழும்பு ஸாஹிரா கல்லூரி எதிர் சென் செபஸ்டியன் கல்லூரி

தொடரின் முதல் வாரத்திற்கான இறுதிப் போட்டியாக திங்கட்கிழமை (03) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த மோதல் கொழும்பு ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

ஆட்டம் ஆரம்பமாகி 10 நிமிடங்கள் கடந்த நிலையில் ஸாஹிரா வீரர் நபீல் உள்ளனுப்பிய பந்தினை பஸ்ருல்லா கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து 20 நிமிடங்கள் கடந்த நிலையில் ஸாஹிரா அணிக்கு கிடைத்த பிரீ கிக்கின்போது உள்வந்த பந்தை செபஸ்டியன் கோல்காப்பாளர் குமார தடுக்க, மீண்டும் தன்னிடம் வந்த பந்தை ஆதில் கோலாக்கி ஸாஹிரா அணியை இரண்டு கோல்களால் முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து ஸாஹிரா அணியினரின் பந்துப் பரிமாற்றங்களை தடுக்கும்போது சென் செபஸ்டியன் அணியின் தலைவர் தினுக பெர்னாண்டோ உதைந்த பந்து அவ்வணியின் கோலுக்குள் செல்ல, ஓன் கோல் முறையில் ஸாஹிரா அணிக்கு அடுத்த கோலும் கிடைத்தது.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 30 செக்கன்கள் செல்வதற்குள் சென் செபஸ்டியன் வீரர் பெர்னாண்டோ கோல் நோக்கி உதைந்த பந்தினை, ஸாஹிரா கோல் காப்பாளர் தடுக்கத் தவற, அவ்வணிக்கான முதல் கோல் பெறப்பட்டது.

அதன் பின்னரும் ஸாஹிரா வீரர்கள் ஒரு பெனால்டி கோல் உட்பட இரண்டு கோல்களைப் பெற, போட்டி நிறைவில் 5-1 என்ற கோல்கள் கணக்கில் கொழும்பு ஸாஹிரா வீரர்கள் இலகுவாக வெற்றி பெற்றனர்.

முழு நேரம்: கொழும்பு ஸாஹிரா கல்லூரி 5 – 1 சென் செபஸ்டியன் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

கொழும்பு ஸாஹிரா கல்லூரி – F.பஸ்ருல்லா, M. ஆதில், DP பெர்னாண்டோ (OG), முபஸ்ஸல் சியாட், M. தாரிக் (P)

சென் செபஸ்டியன் கல்லூரி – KH பெர்னாண்டோ

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<