இரண்டாவது முறை சம்பியன்களான இந்திய லெஜன்ட்ஸ்

2401

வீதிப் பாதுகாப்பினை வலியுறுத்தும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான Road Safety World Series T20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணி, இலங்கை லெஜன்ட்ஸ் அணியினை 33 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

லெஜன்ட்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

இதன்  மூலம் இந்த தொடரில் இரண்டாவது முறையாகவும் சம்பியன் பட்டம் வென்ற அணி என்கிற பெருமையினையும் இந்திய லெஜன்ட்ஸ் அணி பெற்றுக் கொள்கின்றது. மறுமுனையில் இப்போட்டியில் தோல்வியினை தழுவிய இலங்கை லெஜன்ட்ஸ் தொடரில் இரண்டாவது முறையாகவும் இரண்டாம் இடத்தினைப் பெற்ற அணியாக மாறுகின்றது.

இரண்டு அணிகளும் மோதிய தொடரின் இறுதிப் போட்டி நேற்று (01) இந்தியாவின் ராய்பூர் அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய லெஜன்ட்ஸ் அணி வீரர்கள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றனர்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய லெஜன்ட்ஸ் அணிக்கு நாமன் ஓஜா அபார சதம் ஒன்றினைப் பெற்றுக் கொடுத்திருந்தார். இந்த சதத்தின் உதவியோடு இந்திய லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய லெஜன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதம் விளாசிய நாமன் ஓஜா ஆட்டமிழக்காது 71 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 15 பெளண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்களை எடுத்தார்.

இதேநேரம் இலங்கை லெஜன்ட்ஸ் பந்துவீச்சு சார்பில் நுவான் குலசேகர 3 விக்கெட்டுக்களையும், இசுரு உதான 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

ஆசியக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை மகளிர் தோல்வி

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 196 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை லெஜென்ட்ஸ் அணி 18.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 162 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

இலங்கை லெஜன்ட்ஸ் அணி துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக இஷான் ஜயரட்ன 22 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் எடுத்தார்.

இதேநேரம் இந்திய லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் அதன் வெற்றியை வினய் குமார் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், அபிமன்யு மிதுன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய லெஜன்ட்ஸ் அணியின் வீரர் நாமன் ஓஜா தெரிவாக, தொடர் நாயகன் விருது இலங்கை லெஜன்ட்ஸ் அணித்தலைவர் திலகரட்ன டில்சானுக்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

இந்திய லெஜன்ட்ஸ் – 195/6 (20) நாமன் ஓஜா 108 (71)*, நுவான் குலசேகர 29/3(3), இசுரு உதான 34/2(4)

இலங்கை லெஜன்ட்ஸ் – 162 (18.5) இஷான் ஜயரட்ன 51(22), வினய் குமார் 38/3(3.5), அபிமன்யு மிதுன் 27/2(4)

முடிவு – இந்திய லெஜன்ட்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<