வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த சென் ஜோசப், ஹமீட் அல் ஹுசைனி

435

Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 சுற்றுத்தொடரின் முதல் நாளில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியை இலகுவாக வீழ்த்த, ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி வீரர்கள் கந்தானை டி மசெனொட் கல்லூரியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளனர்.

புனித ஜோசப் கல்லூரி எதிர் கிங்ஸ்வூட் கல்லூரி

ராஜகிரிய மொறகஸ்முல்ல விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் சென் ஜோசப் வீரர்கள் கோல்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், தமக்கு கிடைத்த கோணர் வாய்ப்பின்போது மொஹமட் இஹ்சான் கிங்ஸ்வூட் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

எனினும், முதல் பாதி முடிவடைய சில நிமிடங்கள் இருக்கும் தருவாயில் புனித ஜோசப் அணிக்கு கிடைத்த பிரீ கிக்கின்போது உள்வந்த பந்தை கிங்ஸ்வூட் கோல் காப்பாளர் பண்டார பிரியரத்ன பிடிக்க தவறியபோது, புனித ஜோசப் வீரர் தாருக அஷான்த முதல் கேலைப் பெற்று, முதல் பாதியை சமப்படுத்தினார்.

மீண்டும் இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்கள் செல்வதற்குள் மொஹமட் பர்ஹான் கிங்ஸ்வூட் அணிக்கான அடுத்த கோலைப் போட்டு, மீண்டும் தமது கல்லூரியை முன்னிலைப்படுத்தினார்.

எனினும், அதன் பின்னர் தமது விளையாட்டின் வேகத்தை அதிகரித்த புனித ஜோசப் அணிக்கு அன்ரூ 66ஆம் மற்றும் 77ஆம் நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்றுக் கொடுக்க, போட்டியில் அவ்வணி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில் தேஷான் துஷ்மிக்க அடுத்த கோலையும் பெற்றுக்கொடுக்க, போட்டி நிறைவில் புனித ஜோசப் வீரர்கள் 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று, Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 சுற்றுத்தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தனர்.

இந்த போட்டியில் புனித ஜோசப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக, அவ்வணியின் பெதும் கிம்ஹான் வழங்கிய சிறந்த பந்துப் பரிமாற்றங்களை குறிப்பிடலாம்.

முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 4 – 2 கிங்ஸ்வூட் கல்லூரி  

கோல் பெற்றவர்கள்

  • புனித ஜோசப் கல்லூரி – தாருக அஷான்த 43’, WM அன்ரூ 66’&77’, தேஷான் துஷ்மிக்க 84’
  • கிங்ஸ்வூட் கல்லூரி – மொஹமட் இஹ்சான் 23’, மொஹமட் பர்ஹான் 53’

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி எதிர் டி மசெனொட் கல்லூரி

கொழும்பு சிடி லீக் கால்பந்து மைதானத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களாலும் எந்தவொரு கோலும் பெறப்படவில்லை.

இந்நிலையில், இரண்டாம் பாதி ஆட்டமும் கோல்கள் இன்றி சென்றுகொண்டிருந்த வேளையில், ஆட்டத்தின் 80 நிமிடங்கள் கடந்த நிலையில், ஹமீட் அல் ஹுசைனி அணிக்கு எதிரணியின் மத்திய களத்தில் வைத்து கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை அவ்வணியின் நிக்சன் அன்தோனி பெற்றார்.

தடுப்பு வீரர்கள் பலர் இருந்த நிலையில் அந்த தடுப்பைத் தாண்டி கோலின் வலது பக்கத்தினால் பந்தை கோலுக்குள் செலுத்திய நிக்சன், தனது அணியை போட்டியில் வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

முழு நேரம்: ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி 1 – 0 டி மசெனொட் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

  • ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி – நிக்சன் அன்தோனி 85’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<