இராணுவ சார்ஜனாக தரமுயர்த்தப்பட்ட மஹீஷ் தீக்ஷன

Asia Cup 2022

372

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன, இலங்கை இராணுவத்தில் சாதாரண சிப்பாயில் இருந்து சார்ஜன் நிலைக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

சர்வதேச மட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள் நேற்று (20) இராணுவ தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களது திறமைகளை பாராட்டி பதவி உயர்வு மற்றும் நிதி ஊக்குவிப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் மஹிஷ் தீக்ஷன, இலங்கை இராணுவத்தில் சாதாரண சிப்பாயில் இருந்து சார்ஜன் நிலைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் நிறைவடைந்த ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணியில் மஹீஷ் தீக்ஷனவும் இடம்பெற்றிருந்தார். எனவே, குறித்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அவரை சார்ஜென்ட் பதவிக்கு தரமுயர்த்த இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. ·

இதன்படி, இலங்கை இராணுவ தலைமையகத்தில் வைத்து இராணுவத் தளபதி விக்கும் லியனகே மஹீஷ் தீக்ஷனவுக்கான பதவி உயர்வையும், நிதி ஊக்குவிப்புத் தொகையையும் வழங்கி வைத்தார்.

இது தவிர, இந்த ஆண்டு ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை வலைப்பந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய திஷாலா அல்கம, பாஷினி டி சில்வா மற்றும் இதுஷா ஜனனி ஆகியோருடன், 2022 ஆசிய ஆணழகன் சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற பி. ராஜபக்ஷவும் கோப்ரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டனர்.

இதேவேளை, மஹீஷ் தீக்ஷனவுடன். இலங்கை இராணுவ கிரிக்கெட் அணியின் தினேஷ் சந்திமால், திசர பெரேரா, அசேல குணரட்ன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகிய விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<