இந்திய அணிக்கு திரும்பும் கோஹ்லி, ராகுல்; பும்ரா நீக்கம்

Asia Cup 2022

119

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய குழாம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 11ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி 6ஆவது அணியாக ஆசிய கிண்ணத்தில் விளையாடும்.

இந்த தொடரில் முக்கிய போட்டியாகப் பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் திகதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஆசிய கிண்ணத்துக்கான முதல் அணியாக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில். தற்போது 15 வீரர்களை கொண்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த இந்திய அணியின் உதவித் தலைவர் கேஎல் ராகுல் மற்றும் ஓய்வில் இருந்த விராட் கோஹ்லி ஆகிய இருவரும் ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோன்று, இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களாக சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரும், சகலதுறை வீரர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்த குழாத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை தவிர்த்து சுழல் பந்துவீச்சாளர்களாக அஸ்வின், சாஹல், ரவி பிஷ்னோய் ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம், அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அக்ஷர் படேல், தீபக் சஹார், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மேலதிக வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய குழாம்

ரோஹித் சர்மா (தலைவர்), கேஎல் ராகுல், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்

மேலதிக வீரர்கள்

ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல், தீபக் சஹார்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<