தேசிய அமெச்சூர் குத்துச்சண்டையில் வடக்கிற்கு நான்கு பதக்கங்கள்

219

இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்ட்டு அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய அமெச்சூர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் (Novices Boxing Tournament 2022) வவுனியா மாவட்ட குத்துச்சண்டை சம்மேளனத்தின் சார்பில் பங்குகொண்ட வீராங்கனைகள் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.

இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்ட்ட தேசிய அமெச்சூர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடர் கடந்த 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கொழும்பு றேயால் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இலங்கை இராணுவத்தின் ஏ.ஜி.ஏ.டபிள்யூ. ரத்நாயக்கவை வீழ்த்தி எம் மேனுகா தங்கப் பதக்கம் வென்றார்.

இதனிடையே, பெண்பளுக்கான 63 கிலோ எடைப் பிரிவில் இராணுவத்தைச் சேர்ந்த எச்.எச்.எம். சங்கல்பனியை தோற்கடித்து எஸ். தனுஷா தங்கப் பதக்கம் சுவீகரித்தார்.

குத்துச்சண்டையில் இலங்கைக்கு பெருமை சேர்த்த விஜிதா

மேலும், வவுனியா மாவட்ட குத்துச்சண்டை சம்மேளனத்தைச் சேர்ந்த கே.கோகுலவதனி 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், டிலக்ஷனா 48 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோகுலவதனி ஒன்றரை வயது பிள்ளையின் தாய் என்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, தேசிய ரீதியிலான குத்துச்சண்டைப் போட்டியொன்றில் வவுனியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்குபற்றியது இதுவே முதல் தடவையாகும்.

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 92 கிலோ எடைப் பிரிவில் தர்ஷிகன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். வவுனியா குத்துச்சண்டை சம்மேயனத்தின் முன்னாள் வீரரான இவர் தற்போது இலங்கை பொலிஸ் குத்துச்சண்டை அணியில் விளையாடி வருகின்றiமை குறிப்பிடத்தக்கது.

அடிப்படை வசதிகள் அற்ற மிகவும் பின்தங்கிய கிரமாங்களில் இருந்து வந்து தேசிய மட்டத்தில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகள் எதிர்காலத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச மட்டத்தில் பங்குபற்றி வெற்றிகளை ஈட்டி நாட்டிற்கு பெருமையைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக வவுனியா மாவட்ட குத்துச்சண்டை சம்மேளனத்தின் பயிற்றுவிப்பாளர் நிக்ஷன் ரூபராஜ் ThePapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அத்துடன், 21 – 24 வயதுக்குட்பட்டவர்களைத் தவிர வவுனியா மாவட்டத்தில் குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வமுள்ள பல வீராங்கனைகள் இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் குறைவு மற்றும் பணம் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியால் குத்துச்சண்டை விளையாட்டை தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதாகவும் பயிற்சியாளர் ரூபராஜ் தெரிவித்தார்.

‘இந்தப் பிள்ளைகள் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வவுனியாவுக்கு பயிற்சிக்காக வருகிறார்கள். எங்களிடம் பயிற்சி பெற குத்துச்சண்டை வளையம் இல்லை. தற்போது வவுனியா நகர சபைக்குச் சொந்தமான வெளிப்புற விளையாட்டு மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவர்கள் அனைவரும் கூலி தொழில் செய்கின்ற பெற்றோரின் பிள்ளைகள். அதனால், போட்டிகளுக்கான கையுறை, தலைக்கவசம் போன்ற குத்துச்சண்டை உபகரணங்களை வாங்குவதில் சிரமம் உள்ளது. பெரும்பாலும் நான்தான் செலவை ஏற்றுக்கொள்வேன். தற்போது வெளிநாடுகளில் இருந்தும் பங்களிப்புகளை பெற்று வருகிறோம்,’ என்றார்

அத்துடன், நாங்கள் தான் வவுனியாவில் குத்துச்சண்டை விளையாட்டை ஆரம்பித்தோம். நான் 2015 முதல் 2017 வரை ஒரு வீரராக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தேன்.

எனினும், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து விலகிக் கொண்டேன். தற்போது 40 வீரர்கள் என்னிடம் பயிற்சி பெற்று வருகின்றனர். இலங்கைக்காக எதிர்காலத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்பது தான் இந்த வீரர்களின் கனவாகும் என்று 28 வயதான ரூபராஜ் கூறினார்.

தேசிய விளையாட்டு விழா குத்துச்சண்டையில் வடக்குக்கு 6 பதக்கங்கள்

இதேவேளை, தனது தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா நகர சபையினால் குத்துச்சண்டை பயிற்சிகளை மேற்கொள்ள பிரத்தியேமாக ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தற்போது கட்டிட நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வவுனியா மாவட்ட குத்துச்சண்டை சம்மேளனத்தைச் சேர்ந்த வீரர்களுக்குத் தேவையான அனைத்த உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதாக இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் டயான் கோமஸும் தன்னிடம் உறுதியளித்தாக ரூபராஜ் மேலும் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, வன்னி பட்டறை அமைப்பின் ஊடாகத் தான் இம்முறை அமெச்சூர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும் தங்குமிட வசதி, பிராயண செலவு உள்ளிட்ட அனைத்து செலவினங்களுக்குமாக சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தமது வீரர்களுக்கு தேசிய மட்ட போட்டியொன்றில் பங்குபற்றுவதற்கு இவ்வாறு உதவி செய்த வன்னிப் பட்டறையின் ஸ்தாபகர் தர்மராஜா பிரதீபன் உள்ளிட்ட அந்த அமைப்பிற்கு வவுனியா குத்துச்சண்டை சம்மேளனத்தின் சார்பாவும், வீரர்கள் சார்பாகவும் அதன் தலைவர் நிக்ஷன் ரூபராஜ் நன்றிகளைத் தெரிவித்தார்.

குறிப்பாக, வட மாகாணத்தில் கல்வி, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்காக கடந்த பல ஆண்டுகளாக நிதி உதவிகளை வழங்கி வருகின்ற வன்னிப் பட்டறை அமைப்பின் ஊடாக எதிர்காலத்தில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களைப் போல வட மாகாணத்தில் உள்ள திறமையான வீரர்களுக்கும் உதவிகள் வழங்குவதற்கு அந்த அமைப்பு தயாராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 >>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<