சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வினை அறிவித்த இயன் மோர்கன்

270

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக காணப்படும் இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார். 

35 வயது நிரம்பிய இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்த வாரம் ஓய்வு பெறவிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அது தற்போது அவரின் ஓய்வு அறிவிப்பின் மூலமே உறுதியாகியிருக்கின்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்மித், ஸ்டார்க் ஆடுவார்களா??

”கவனமாகவும், நிதானமாகவும் யோசித்து எடுத்த தீர்மானத்திற்கு அமைய உடனடி அமுலுக்கு வரும் வகையில் நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவிக்கின்றேன்.” என இயன் மோர்கன் குறிப்பிட்டிருக்கின்றார்.

2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை வென்றதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு, ஒருநாள் உலகக் கிண்ணம் ஒன்றை முதல் முறையாக வென்று புகழ் தேடிக்கொடுத்திருந்த இயன் மோர்கன், தனது தலைமையில் கீழ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினை ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் முதல் நிலை அணியாகவும் மாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அவுஸ்திரேலிய மண்ணில் நடைபெறவிருக்கும் T20I உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணியினை மோர்கன் வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர் கடந்த 18 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திவருகின்றமை அவரின் ஓய்வுக்கு பிரதான காரணமாக அமைவதாக SkySports செய்தித்தளம் குறிப்பிட்டிருக்கின்றது.

முரளி-வோர்ன் கிண்ணத்தை தம்வசப்படுத்துமா இலங்கை?

அயர்லாந்து நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் மோர்கன் கடந்த 2006ஆம் ஆண்டு அயர்லாந்து கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அறிமுகம் பெற்றிருந்தார்.

பின்னர் 2009ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியினை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவம் செய்யத் தொடங்கிய அவர் 248 ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஆடி 14 சதங்கள் அடங்கலாக 7,701 ஓட்டங்கள் குவித்திருப்பதோடு, 115 T20I போட்டிகளில் ஆடி 14 அரைச்சதங்கள் அடங்கலாக 2,458 ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<