சர்ரே அணிக்கு எதிராக சதமடித்த நிபுன் தனன்ஜய

Sri Lanka Emerging Team Tour of England 2022

149

இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி மற்றும் சர்ரே கிரிக்கெட் கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (22) நிறைவுக்கு வந்தது.

இதில் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் நிபுன் தனன்ஜய சதமடித்து அசத்த, இளம் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே மற்றும் அவிஷ்க தரிந்து ஆகிய இருவரும் அரைச்சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணிக்கும், சர்ரே கிரிக்கெட் அணிக்கும் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட போட்டி நேற்று முன் தினம் (20) இங்கிலாந்தின் கில்பர்ட்டில் ஆரம்பமாகியது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி, சீரற்ற காலநிலையால் நேற்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் நிபுன் தனன்ஜய 81 ஓட்டங்களையும், அவிஷ்க தரிந்து 48 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று களத்தில் நின்றனர்.

இது இவ்வாறிருக்க, போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் (21) இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

ஆறாவது விக்கெட்டுக்காக நிபுன் தனன்ஞய – அவிஷ்க தரிந்து ஜோடி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ஓட்டங்களை சேர்த்தனர். இதில் அவிஷ்க தரிந்து 48 ஓட்டங்களை எடுத்து அரைச்சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். தொடர்ந்து வந்த மானெல்கர் டி சில்வா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து அணித்தவைர் நிபுன் தனன்ஜயவுடன் ஜோடி சேர்ந்த துனித் வெல்லாலகே 8ஆவது விக்கெட்டுக்காக 87 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து வலுச்சேர்த்தார். எனினும், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும், அணித்தலைவர் நிபுன் தனன்ஜய சதம் கடந்து ஆட்டமிழக்காமல் பெற்றக்கொண்ட 150 ஓட்டங்களுடன் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி, முதல் இன்னிங்ஸுக்காக 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 372 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. முதல்தரப் போட்டிகளில் நிபுன் தனன்ஜயவின் இரண்டாவது சதமாகவும், முதல் 150 ஓட்டங்களாகவும் இது பதிவாகியது.

சர்ரே அணியின் பந்துவீச்சில் டொம் லோவ்ஸ் மற்றும் அமர் வெர்டி ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சர்ரே கிரிக்கெட் அணி, போட்டியின் 2ஆவது நாள் ஆட்டம் நிறைவடையும் போது எந்தவொரு விக்கெட் இழப்பின்றி 196 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் காணப்படுகின்றது.

சர்ரே அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரை பென் கெடஸ் மற்றும் ரையன் பட்டேல் ஜோடி முதல் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டமொன்றைப் பெற்று வலுச்சேர்த்தனர். இதில் முதல் தரப் போட்டிகளில் 3ஆவது சதமடித்து அசத்திய ரையன் பட்டேல் 109 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க பென் கெடஸ் 75 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (22) நடைபெறவுள்ளது

போட்டியின் சுருக்கம்

இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி – 372/9d (102) – நிபுன் தனன்ஞய 150, அவிஷ்க தரிந்து 48, துனித் வெல்லாலகே 46, டொம் லோவ்ஸ் 3/34, அமர் வெர்டி 3/67

சர்ரே அணி – 196/0 (57) – ரையன் பட்டேல் 109*, பென் கெடஸ் 75*

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<