தனன்ஜயவின் அரைச்சதத்துடன் இலங்கை வீரர்கள் முன்னிலை

Sri Lanka Emerging Team Tour of England 2022

157

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி மற்றும் சர்ரே கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட மூன்றாவது போட்டி நேற்று (20) ஆரம்பமானது.

இதில் முதல் நாளில் தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுபெடுத்தாடி வருகின்ற இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி நிபுன் தனன்ஞயவின் அரைச் சதத்தின் உதவியுடன் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்தின் கில்பர்ட்டில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சர்ரே அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 45 ஓட்டங்களுக்கு இழந்தது. நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லசித் க்ரூஸ்புள்ளே (32) டொம் லோவ்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிஷான் மதுஷ்க ஒரு ஓட்டத்துடனும், அவிஷ்க பெரேரா 13 ஓட்டங்களுடனும், நுவனிந்து பெர்னாண்டோ 16 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த நிபுன் தனன்ஜய – அவிஷ்க தரிந்து ஆகிய இருவரும் நிதானமாக ஆடி 6ஆவது விக்கெட்டுக்காக 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

எனினும், போட்டியின் முதல் பாதி ஆட்டத்தைப் போல கடைசிப் பாதி ஆட்டமும் மழையினால் தடைப்பட போட்டியின் முதல் நாள் ஆட்டம் 63 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

எனவே, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்களைப் பெற்று காணப்படுகின்றது.

இலங்கை அணி சார்பில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் நிபுன் தனன்ஜய 126 பந்துகளுக்கு முகங்கொடுத்து 4 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களையும், அவிஷ்க தரிந்து 48 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

சர்ரே அணியின் பந்துவீச்சில் டொம் லோவ்ஸ் 3 விக்கெட்டுகளையும், அமர் வெர்டி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (21) நடைபெறவுள்ளது

போட்டியின் சுருக்கம்

இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி – 230/6 (63) நிபுன் தனன்ஜய 81*, அவிஷ்க தரிந்து 48*, லசித் க்ருஸ்புள்ளே 32, நுவனிந்து பெர்னாண்டோ 16, டொம் லோவ்ஸ் 3/34, அமர் வெர்டி 2/45

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<