வெற்றியுடன் சுதந்திர கிண்ணத்தை ஆரம்பித்த ஊவா

233
Independence Trophy 2022

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்து லீக் சுற்றுத் தொடரின் முதல் வெற்றியை ஊவா மாகாண அணி பதிவு செய்துள்ளது.

சுற்றுத் தொடரின் ஆரம்பப் போட்டி நேற்று (25) மாலை குருனாகலை மாலிகாபிடிய அரங்கத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் கிழக்கு மற்றும் மத்திய மாகாண அணிகள் மோதின.

பின்னர் இரவு இடம்பெற்ற தொடருக்கான ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர் சொந்த மைதான அணியான ரஜரட மற்றும் ஊாவா மாகாண அணிகள் மோதின.

கிழக்கு எதிர் மத்தி

இவ்விரு அணிகளும் போட்டியின் ஆரம்பம் முதல் சம பலத்துடன் மோதிக் கொண்டன. எனினும், இரண்டு பாதிகளிலும் எந்த அணி வீரர்களாலும் கோல்கள் பெறப்படாமையினால் ஆட்டம் கோல்கள் இன்றி சமநிலையில் நிறைவுற்றது.

கிழக்கு மாகாண அணி தமது அடுத்த போட்டியில் ரஜரட அணியையும் மத்திய மாகாண அணி அடுத்த போட்டியில் மேல் மாகாண அணியையும் எதிர்கொள்ளவுள்ளன.

முழு நேரம்: கிழக்கு 0 – 0 மத்தி


ரஜரட எதிர் ஊவா

ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர் மின்னொளியின் கீழ் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ஊவா அணிக்கு எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் வைத்து கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை 19 வயதின்கீழ் வீரர் பிராஸ் ஸஹீர் பெற்றார். தடுப்புக்களுக்கு மத்தியில் கோலின் இடது பக்கத்தினால் பந்தை செலுத்திய பிராஸ் போட்டியினதும் தொடரினதும் முதல் கோலைப் பதிவு செய்தார்.

அதன் பின்னர் போட்டியின் முழு நேரம் முடியும் வரையில் எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில் ஊவா மாகாண அணி 1-0 என்ற கோல்கள் கணக்கில் ரஜரட அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பம் செய்தது.

ஊவா மாகாண அணி தமது அடுத்த போட்டியில் வட மாகாணத்திற்கு எதிராக விளையாடவுள்ளது.

முழு நேரம்: ரஜரட 0 – 1 ஊவா

கோல் பெற்றவர்கள்

  • ஊவா – பிராஸ் ஸஹீர் 10

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<