டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் தொடர் வெற்றியை நோக்கி களமிறங்கும் இலங்கை!

West Indies tour of Sri Lanka 2021

629

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெற்றிக்கொண்ட இலங்கை அணி, தொடரை வெற்றிக்கொள்ளும் முனைப்புடன் திங்கட்கிழமை (29) இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது.

முதல் போட்டியில் 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை இலங்கை அணி பெற்றிருந்த போதும், பலம் மிக்க மே.தீவுகள் அணி இந்த போட்டியில் இலங்கை அணிக்கு கடுமையான சவாலை கொடுக்க காத்திருக்கிறது.

>>19 வயதின்கீழ் பிரிவு 3 இறுதிப்போட்டிக்கு யாழ் மத்திய கல்லூரி தெரிவு

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

கடந்த 2005ம் ஆண்டிலிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிய எந்தவொரு டெஸ்ட் தொடரையும், இழக்காத தங்களுடைய சாதனையை இந்த தொடரிலும் இலங்கை அணி முதல் போட்டியில் பெற்ற வெற்றியுடன் தொடர்கின்றது.

அதுமாத்திரமின்றி, இலங்கை அணிக்கு எதிராக மே.தீவுகள் அணி 11 டெஸ்ட் போட்டிகளில், இலங்கை மண்ணில் விளையாடியுள்ளதுடன், 7 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளதுடன், 4 போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளன. எனவே, இலங்கை மண்ணில் இதுவரையிலும் வெற்றிபெறாத மே.தீவுகள் அணி, இந்த போட்டியில் வெற்றிபெற்று தங்களுடைய மோசமான சாதனையை தகர்க்க காத்திருக்கிறது.

இலங்கை அணி

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் இந்த டெஸ்ட் போட்டியுடன் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகுகின்றார். எனவே, இந்த போட்டியில் வெற்றியுடன் அவருக்கு விடைகொடுக்க இலங்கை அணி எதிர்பார்த்துள்ளது.

முதல் போட்டியில் திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் பெதும் நிஸ்ஸங்க போன்ற துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசித்திருந்ததுடன், சுழல் பந்துவீச்சும் சிறப்பாக அமைந்திருந்தது.

இந்த பிரகாசிப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த வெற்றியுடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புள்ளிப்பட்டியலில், இலங்கை அணி முதலிடத்துக்கும் முன்னேறியுள்ளது. எனவே, இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றால், தங்களுடைய வெற்றி சதவீதத்தை 100 வீதமாக கொண்டு, இலங்கை அணியால், தொடர்ந்தும் முதலிடத்தை வகிக்க முடியும்.

இதேவேளை, முதல் போட்டிக்கான இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து துஷ்மந்தம சமீர, சுமிந்த லக்ஷான், ரொஷேன் சில்வா, கமில் மிஷார மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, அணியில் குறைந்தது ஒரு மாற்றம் ஏற்படுத்தப்படலாம். குறிப்பாக, துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக மேலதிக துடுப்பாட்ட வீரராக சரித் அசலங்க டெஸ்ட் அறிமுகத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை உத்தேச பதினொருவர்

திமுத் கருணாரத்ன (தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால், பிரவீன் ஜயவிக்ரம, பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, சரித் அசலங்க, ஓசத பெர்னாண்டோ,, லசித் எம்புல்தெனிய,, ரமேஷ் மெண்டிஸ்

எதிர்பார்ப்பு வீரர்

முதல் டெஸ்ட் போட்டியில் 147 ஓட்டங்கள் மற்றும் 83 ஓட்டங்கள் என இரண்டு இன்னிங்ஸ்களிலும் பிரகாசித்த அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இலங்கை அணியின் எதிர்பார்ப்பு வீரராக உள்ளார்.

குறிப்பாக இறுதியாக இவர் விளையாடிய 6 டெஸ்ட் இன்னிங்ஸ்களில், 66, 118, 244, 75, 147 மற்றும் 83 என ஓட்டங்களை குவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும், இவரது ஓட்டக்குவிப்பு சிறப்பாக அமைந்து வருகின்றது. இந்த ஆண்டு 11 இன்னிங்ஸ்களில் 77.63 என்ற சராசரியில், 854 ஓட்டங்களை குவித்துள்ளார். எனவே, இந்த போட்டியிலும், இலங்கை அணிக்காக அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்திய தீவுகள் அணியின் கடந்தகால மோசமான டெஸ்ட் பிரகாசிப்பு இந்த தொடரிலும் தொடர்கிறது. குறிப்பாக, முதல் டெஸ்ட் போட்டியில், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தாலும், துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறியிருந்தனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காத காரணத்தால், போட்டியை சமப்படுத்துவதற்கான வாய்ப்பும் மே.தீவுகள் அணிக்கு குறைந்திருந்தது. இதேவேளை, இலங்கை மண்ணில் கிடைத்துள்ள தொடர் தோல்விகள் அவர்களுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்துள்ளது. எனவே,  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசித்து தொடரை சமப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள மே.தீவுகள் அணி தயாராகிவருகின்றது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. குறிப்பாக, முதல் போட்டியில் தலையில் பந்து தாக்கியதன் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய ஜெரமி சொலென்ஷோ மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் உத்தேச பதினொருவர்

கிரைக் பிராத்வைட் (தலைவர்), ஜேர்மைன் பிளக்வூட், குரூமா போனர், ரகீம் கொர்ன்வல், ஜேசன் ஹோல்டர், கெயல் மேயர்ஸ், ஜசூவா டி சில்வா, ஷெனொன் கேப்ரியல், ஜோமல் வரிகன், ரொஸ்டன் சேஸ், , ஜெரமி சொலென்ஷோ

எதிர்பார்ப்பு வீரர்

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் ரொஷ்டன் சேஸ் துணைக்கண்டங்களில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தக்கூடிய வீரர். குறிப்பாக, முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தன்னுடைய ஐந்து விக்கெட் பிரதியையும் கைப்பற்றியிருந்தார்.

பந்துவீச்சில் மாத்திரமின்றி டெஸ்ட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய திறமையை இவர் கொண்டிருந்தாலும், முதல் போட்டியில் அவரால் துடுப்பாட்டத்தில் சோபிக்க முடியவில்லை. எனவே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக…

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதன் மூலம் அணியின் நம்பிக்கை மட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் சுழல் பந்துவீச்சாளர்களாக இருந்தாலும், காலி மைதானத்தில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தினர். எனவே, இந்த போட்டியில் வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றுவதுடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகளிலும் இலங்கை அவதானம் செலுத்தும்.

மேற்கிந்திய தீவுகள் அணியை பொருத்தவரை, முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறியமை ஏமாற்றமளித்திருந்தது. எனினும், தற்போது, ஆடுகளம் மற்றும் காலநிலை தொடர்பில் சிறந்த சிந்தனை இருப்பதால், இந்த போட்டியில் வெற்றிபெற்று, தொடரை சமப்படுத்தும் முனைப்புடன் மேற்கிந்திய தீவுகள் களமிறங்கும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<