ஓமானை வீழ்த்தி சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றது ஸ்கொட்லாந்து

ICC T20 World Cup – 2021

99
Getty

T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற B குழுவிற்கான கடைசி லீக் போட்டியில் ஓமானை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து அணி வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரின் சுபர் 12 சுற்றுக்கு மூன்றாவது அணியாக ஸ்கொட்லாந்து தகுதிபெற்றது.

அத்துடன், 2018இல் T20 போட்டிகளுக்கான ஐசிசி இன் முழு உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட ஸ்கொட்லாந்து அணி, முதல் முறையாக T20 உலகக் கிண்ண சுபர் சுற்றுக்குத் தகுதிபெற்று வரலாறு படைத்தது.

ஏழாவது T20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று (21) இரவு ஓமானின் அல்-அமீரத் மைதானத்தில் நடைபெற்ற முதல் சுற்றின் 10ஆவது லீக் போட்டியில் ஓமான் – ஸ்கொட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சகீப் அல் ஹஸனின் சகலதுறை பிரகாசிப்பால் சுபர் 12 சுற்றில் பங்களாதேஷ்!

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஓமான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஓமான் அணியின் ஆரம்ப வீரர் ஜதிந்தர் சிங் முதல் ஓவரின் 2ஆவது பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த காஷ;யப் பிரஜாபதியும் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த அகிப் இல்யாஸ் – மொஹமட் நதீம் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இதில் அகிப் இல்யாஸ் 37 ஓட்டங்களுடனும், நதீம் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ஷீஸான் மக்சூத் 34 ஓட்டங்களைக் குவித்து அணிக்கு மேலும் வலுச்சேர்த்தார்.

அயர்லாந்துடனான வெற்றியுடன் சுபர் 12 சுற்றுக்கு இலங்கை தகுதி

இதன்மூலம் ஓமான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில் ஜோஸ் டேவி 3 விக்கெட்டுக்களையும், சப்யான் ஷெரீப், மைக்கல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஸ்கொட்லாந்து அணிக்கு ஆரம்ப வீரர்களான ஜோர்ஜ் முன்சி – கைல் கொட்சர் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தது.

இதில் முன்சி 20 ஓட்டங்களுடனும், அரைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவர் கைல் கொட்சர் 41 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய மெத்திவ் க்ரொஸ் – ரிச்சி பெர்ரிங்டன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

சுபர் 12 சுற்றுக்கு முன் இலங்கைக்கு உள்ள இறுதி சவால் நெதர்லாந்து

இதன்மூலம் 17 ஓவர்களிலேயே ஸ்கொட்லாந்து அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஓமானை வீழ்த்தியதுடன், T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுக்கான வாய்ப்பையும் பெற்றுக்கொண்டது.

இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் B குழுவில் இடம்பிடித்த ஸ்கொட்லாந்து அணி, முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியையும், இரண்டாவது போட்டியில் பப்புவா நியு கினியா அணியையும் வீழ்த்தியது. தற்போது ஓமான் அணியையும் வீழ்த்தி ஹெட்ரிக் வெற்றியுடன் B குழுவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி, சுபர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள முதலாவது குழுவில் விளையாட ஸ்கொட்லாந்து அணி தகுதிபெற்றது.

இதனிடையே, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா,

அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள இரண்டாவது குழுவில் விளையாட தகுதிபெற்றது.

போட்டியின் சுருக்கம்

ஓமான் அணி – 122/10 (20) – அகிப் இல்யாஸ் 37, ஷீஸான் மக்சூத் 34, மொஹமட் நதீம் 24, ஜோஸ் டேவி 25/3, மைக்கல் லீஸ்க் 13/2 சப்யான் ஷெரீப் 25/2

ஸ்கொட்லாந்து அணி – 123/2 (17) – கைல் கொட்சர் 41, ரிச்சி பெர்ரிங்டன் 31, மெத்திவ் க்ரொஸ் 26, பிலால் பான் 26/1, கவார் அலி 27/1

முடிவு – ஸ்கொட்லாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

>> Click here to view Full Scorecard