சுபர் 12 சுற்றுக்கு முன் இலங்கைக்கு உள்ள இறுதி சவால் நெதர்லாந்து

180

T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்று குழு A இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான தொடரின் முதற்சுற்றுக்குரிய இறுதி குழுநிலைப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) இரவு நடைபெறுகின்றது.

இரு அணிகளுக்கு இடையிலான வரலாறு

T20 உலகக் கிண்ண முன்னாள் சம்பியன்களான இலங்கை கிரிக்கெட் அணி, T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மிக வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வரும் நிலையில், நெதர்லாந்து அணி அவ்வாறான ஒரு பதிவினை காட்டியிருக்கவில்லை.

அயர்லாந்துடனான மோதல் இலங்கைக்கு ஒரு சவால்

குறிப்பாக, நடைபெற்றுவரும் T20 உலகக் கிண்ணத் தொடரிற்கு முன்னர் மூன்று T20 உலகக் கிண்ணத்தொடர்களில் மாத்திரமே நெதர்லாந்து அணி ஆடியிருக்க, இலங்கை இதற்கு முன்னர் நடைபெற்ற ஆறு T20 உலகக் கிண்ணத் தொடர்களிலும் பங்கேற்று திறமையினை வெளிப்படுத்தியிருக்கின்றது. நெதர்லாந்து அணி, T20 உலகக் கிண்ணங்களில் வெளிப்படுத்திய சிறந்த பதிவாக அவ்வணி 2010ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் சுபர் 10 சுற்றில் விளையாடியதனை குறிப்பிட முடியும்.

அதேநேரம் இரு அணிகளும் T20 உலகக் கிண்ணத் தொடர்களில் ஆடிய போட்டிகளை நோக்கும் போது, 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் நடைபெற்ற குழுநிலைப் போட்டி ஒன்றில் மாத்திரமே ஆடியிருக்கின்றன. குறித்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது. மறுமுனையில் அந்தப் போட்டியில் நெதர்லாந்தினை இலங்கை 39 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தியிருந்ததுடன் அது T20 உலகக் கிண்ணத்தில் அணியொன்று பெற்ற அதிகுறைந்த ஓட்டங்களாகவும் பதிவானது.

இலங்கை அணி  

T20 உலகக் கிண்ணத்தில் அயர்லாந்து, நமீபியா என தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணி, முதல் சுற்றில் இருந்து சுபர் 12 சுற்றுக்கு தெரிவாகிய முதல் அணியாக காணப்படுகின்றது. எனவே, நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு அழுத்தங்கள் எதுவும் இல்லை. ஆனால், அழுத்தங்கள் இல்லை என நெதர்லாந்தினை இலங்கை அணி இலகுவாக நினைத்துவிடக் கூடாது. ஏனெனில், நெதர்லாந்து T20 உலகக் கிண்ணத்தொடரில் இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.

இலங்கை அணி, T20 உலகக் கிண்ணத்திற்கான அடுத்த சுற்றுக்கு தெரிவாகிய போதிலும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்வரிசை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் மிகவும் பலவீனமாக இருந்ததனை அவதானிக்க முடியுமாக இருந்தது. குறித்த இரண்டு போட்டிகளிலும் தினேஷ் சந்திமால், குசல் பெரேரா போன்ற இலங்கையின் அனுபவமிக்க துடுப்பாட்டவீரர்கள் மோசமாக செயற்பட்டிருந்தனர்.

இனி நெதர்லாந்து உள்ளடங்கலாக T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை ஆடவிருக்கும் அனைத்துப் போட்டிகளிலும் தமது துடுப்பாட்ட வரிசையினை சரிசெய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. அந்தவகையில் இலங்கை அணி T20 உலகக் கிண்ணத்தில் ஆடவிருக்கும் அடுத்த போட்டியில் சரித் அசலன்க அல்லது இலங்கை அணியின் உப தலைவர் தனன்ஜய டி சில்வாவிற்கு அணியில் வாய்ப்பு வழங்குவதனை எதிர்பார்க்க முடியும்.

சவால்களுடன் T20 உலகக் கிண்ணத்தை இலக்கு வைக்கும் நியூசிலாந்து

அதேநேரம் இலங்கை வீரர்கள் ஆடிய போட்டிகள் அனைத்திலும் இளம் வீரர்களின் பிரகாசிப்பு தொடர்ச்சியாக இருந்ததனை அவதானிக்க முடியுமாக இருந்தது. அந்தவகையில் அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க மற்றும் பானுக்க ராஜபக்ஷ போன்ற வீரர்கள் இலங்கையின் துடுப்பாட்டத் துறைக்கு பலம் வழங்க வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறைக்கு மேலும் பலம் சேர்க்கின்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சுத்துறையினை நோக்கும் போது அஜந்த மெண்டிஸின் மறு உருவமாக இருக்கும் மஹீஷ் தீக்ஷண, மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் எதிரணித்துடுப்பாட்டவீரர்களை பின்வாங்கச் செய்யும் லஹிரு குமார, துஷ்மன்த சமீர போன்ற வீரர்கள் இலங்கை அணிக்கு சிறப்பான பங்களிப்பினை தொடர்ந்து வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கொட்லாந்து அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த பங்களாதேஷ்

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மன்த சமீர, அகில தனன்ஜய, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார

எதிர்பார்ப்பு வீரர்

தசுன் ஷானக்க – T20 போட்டிகளில் இலங்கை அணிக்கு Finisher ஒருவரின் தேவை நீண்ட காலம் உணரப்பட்டிருந்தது. அண்மைய போட்டிகளினை பார்க்கும் போது இலங்கைக்கு ஒரு Finishing துடுப்பாட்டவீரராக அணித்தலைவரான தசுன் ஷானக்க உருவெடுக்கின்றார். இலகுவான துடுப்பாட்ட பாணியில் பௌண்டரிகளை இலகுவாக அடிக்கும் தசுன் ஷானக்க, இலங்கை அணி கடைசியாக ஆடிய போட்டியிலும் சிறப்பாக இறுதியில் ஓட்டங்களை அணிக்கு பெற்றுக்கொடுத்திருந்தார். எனவே, நெதர்லாந்து அணியுடனான போட்டியிலும் தசுன் ஷானக்க பிரகாசிக்க எதிர்பார்க்கப்படும் வீரராக காணப்படுகின்றார்.

நெதர்லாந்து அணி

தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து T20 உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை ஏற்கனவே இழந்த போதும் நெதர்லாந்து அணி, ஆறுதல் வெற்றி வேட்கையில் இன்னும் காணப்படுகின்றது. எனவே, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவர்களின் ஆட்டம் போராட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நெதர்லாந்து அணியின் துடுப்பாட்டத்தினை நோக்கும் போது அவ்வணிக்கு துடுப்பாட்டத்துறையில் மெக்ஸ் ஒடொவ்ட், மைபர்க் மற்றும் வன்டர் மெர்வ் போன்ற வீரர்களுடன் ஏக்கர்மேனும் பலம் சேர்க்கின்றார். மறுமுனையில், அந்த அணிக்கு பந்துவீச்சாளர்களாக அணித்தலைவரும் சுழல்பந்துவீச்சாளருமான பீட்டர் சீலர், பிரண்டன் க்ளோவர் ஆகிய வீரர்களுடன் பிரட் கிளாஸ்ஸனும் காணப்படுகின்றார்.

நெதர்லாந்து குழாம்

மெக்ஸ் ஒடொவ்ட், பென் கூப்பர், பாஸ் டி லீடே, கொலின் அக்கர்மன், ரயன் டென் டஸ்சாட்டே, ஸ்கொட் எட்வார்ட்ஸ், ரியலொப் வன் டர் மெர்வே, பீட்டர் சீலர், லோகன் வான் பீக், பிரட் கிளாஸ்ஸன், பிரன்டன் குளோவர், ஸ்டீபன் மைபர்கெ, பிலிப்பே பொயிஸ்வெயின், போல் வான் மீக்கிரேன், டிம் வான் டெர் குக்டன்

எதிர்பார்ப்பு வீரர்

மெக்ஸ் ஒடொவ்ட் – நெதர்லாந்து அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரராக காணப்படும் மெக்ஸ் ஒடொவ்ட், நடைபெறப்போகும் போட்டியில் இலங்கைப் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடிய ஒருவராக காணப்படுகின்றார். மெக்ஸ் ஒடொவ்ட் T20 உலகக் கிண்ணத்தில் நெதர்லாந்து அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் அரைச்சதம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக

இலங்கை அணிக்கு நெதர்லாந்து அணியுடனான மோதல், மீள் கட்டமைக்கும்  தேவை கொண்ட தமது துடுப்பாட்ட வரிசையினை பரீட்சித்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. எனவே, சுபர் 12 சுற்றுக்கு செல்வதற்கு முன்னர் இலங்கை வீரர்கள்  தங்களை தயார்படுத்தி கொள்வதற்கான பொன்னான வாய்ப்பினை நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டி மூலம் பெற்றிருக்கின்றனர். மறுமுனையில், நெதர்லாந்து அணிக்கும் இலங்கை அணியுடனான தங்களது திறமையினை நிரூபிப்பதற்கு கிடைத்த இறுதி சந்தர்ப்பமாக கருதப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<