T20 உலகக் கிண்ணம்; தகுதி சுற்றில் இலங்கைக்கு எதிரான சவால்கள்

ICC T20 World Cup – 2021

400
Getty Image/ICC

ஐசிசி இன் 7ஆவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் நடப்புச் சம்பியன் மேற்கிந்திய தீவுகள் உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன.

அதேபோல, இம்முறை தொடரில் தகுதிகாண் சுற்று, சுப்பர் 12 சுற்று மற்றும் நொக்-அவுட் சுற்று என 3 வகையான சுற்றுகள் நடைபெற உள்ளன. இதன்படி, T20 உலகக் கிண்ணத்தில் முதலாவதாக தகுதிகாண் போட்டிகள் A மற்றும் B குழுக்களாக நடைபெறவுள்ளன.

குழுக்களில் தலா 4 அணிகள் என மொத்தம் 8 அணிகள பங்கேற்கும் இந்த சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடைபெற உள்ளன. குழுக்களில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற உள்ளது.

பபுவா நியூ கினியா அணியுடன் இலகு வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை

இதில் ஒக்டோபர் 17ஆம் B குழுவில் இடம்பிடித்துள்ள போட்டியை நடத்தும் ஓமான் தனது சொந்த மண்ணில் பப்புவா நியூ கினியாவை எதிர்கொள்கிறது.

இதனிடையே, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் முதலாவது தகுதிகாண் போட்டிகளில் விளையாடவுள்ள முன்னாள் சம்பியனான இலங்கை அணி, A குழுவில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, இலங்கை அணி, தனது முதல் போட்டியில் நமிபியாவை அபுதாபியில் ஒக்டோபர் 18ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அயர்லாந்தை அபுதாபியில் 20ஆம் திகதியும், நெதர்லாந்தை சார்ஜாவில் 22ஆம் திகதியும் எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழுவில் முதலிடத்தைப் பெற்றுக்கொள்கின்ற அணி, சுப்பர் 12 சுற்றின் குழு 1 இலும், இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொள்கின்ற அணி, சுப்பர் 12 சுற்றில் குழு 2 இலும் இடம்பெறும்.

எனவே, இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றில் A குழுவில் களமிறங்கும் அணிகள் பற்றிய முழுமையான விபரங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

இலங்கை அணி

தகுதிகாண் சுற்றில் A குழுவில் இடம்பெற்றுள்ள பலமிக்க அணியாக இலங்கை விளங்குகிறது.

2006இல் சர்வதேச T20 அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி, T20 உலகக் கிண்ண வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஒரு அணியாகவே வலம்வந்தது.

இதில் T20 உலக தரவரிசையில் நீண்டகாலம் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்ட ஒரே அணி என்ற பெருமையையும் இலங்கையையே சாரும்.

எனினும், இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி நேரடித் தகுதியைப் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், T20 உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் மூன்று தடவைகள் (2009, 2012, 2014) இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி, அதில் 2014இல் சம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும், பல முன்னணி அணிகளை வீழ்த்திய அணியாகவும் இலங்கை அணிக்கு முக்கிய இடம் உண்டு.

அதுமாத்திரமின்றி, T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மஹேல ஜயவர்தனவும் (1016), அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய இரண்டாவது வீரராக லசித் மாலிங்கவும் (38) இடம்பிடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எதுஎவ்வாறாயினும், T20 வடிவத்தில் உலகின் Number One அணியாக வலம்வந்த முன்னாள் T20 உலக சம்பியனான இலங்கை அணி, 2021 T20 உலகக் கிண்ணத்தில் தகுதிகாண் சுற்றில் விளையாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டது.

எனவே, இம்முறை T20 உலகக் கிண்ணத்துக்கான தசுன் ஷானக தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை அணி கடந்த மாத முற்பகுதியில் அறிவிக்கப்பட்டது.

எனினும், ஐசிசியினால் இம்மாதம் 10ஆம் திகதி வரை உலகக் கிண்ண குழாத்தில் மாற்றங்களை செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இலங்கை குழாத்தில் ஏற்கனவே இடம்பெற்ற நான்கு வீரர்கள்

நீக்கப்பட்டு புதிதாக நான்கு வீரர்களை இணைத்துக்கொள்ள தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

T20 உலகக்கிண்ணத்தில் சாதித்து காட்டுமா இலங்கை?

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் அனுபவம் குறைந்த இளம் வீரர்களைக் கொண்ட அணியாகவே இலங்கை அணி களமிறங்குகிறது. இதில் 2016 T20 உலகக் கிண்ணத்தில் இடம்பிடித்த தசுன் ஷானக, தினேஷ் சந்திமால், குசல் பெரேரார மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் மாத்திரம் தான் இம்முறை T20 உலகக் கிண்ண இலங்கை அணியில் அதிக அனுபவம் கொண்ட வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இதில் குறிப்பாக லசித் மாலிங்க மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறாமை மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது.

அயர்லாந்து அணி

ஐசிசி இன் டெஸ்ட் அந்தஸ்த்தை அண்மையில் பெற்றுக்கொண்ட அணியாக அயர்லாந்து அணி, இம்முறை T20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ளது.

2008இல் நெதர்லாந்து அணியுடன் T20 போட்டியில் விளையாடி ஐசிசி இன் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்ட அயர்லாந்து அணி, 2007இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தை தவிர மற்றைய எல்லா T20 உலகக் கிண்ணத்திலும் பங்கேற்றுள்ளது.

இதில் 2009இல் பங்களாதேஷ் அணியையும், 2014இல் ஜிம்பாப்வே மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளை வீழ்த்தியது தான் அந்த அணி T20 உலகக் கிண்ணத்தில் பெற்றுக்கொண்ட வெற்றிகளாகும்.

எனினும், கிரிக்கெட் உலகில் எந்தவொரு அணியையும் வீழ்த்துகின்ற சக்தி அயர்லாந்திடம் காணப்படுகின்றது என்றால் மிகையாகாது.

இந்த நிலையில், கடந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2021 T20 உலகக் கிண்ணத்திற்காக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதன் மூலம் T20 உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளரான கிரஹம் போர்ட் அயர்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்றார்.

இதனிடையே, அன்ட்ரூ போல்பேர்னியின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அயர்லாந்து அணியில் மூன்று வீரர்கள் மேலதிக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

அயர்லாந்து அணியின் முக்கிய துரும்புச் சீட்டாக அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான போல் ஸ்டெர்லிங் விளங்குகிறார்.

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற T20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்ற 31 வயதான இவர், சர்வதேச T20 போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 2495 ஓட்டங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

அதேபோல, T20 போட்டிகளில் அதிரடியாக விளையாடுகின்ற மிகவும் அனுபவமிக்க வீரரான கெவின் ஓ பிரையன் அயர்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

அதேபோல. அவர் அயர்லாந்து அணியில் உள்ள வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவரைத் தொடர்ந்து அந்த அணியின் மூன்றாம் இலக்க வீரராக அணித்தலைவர் அன்ட்ரூ போல்பேர்னி செயல்படவுள்ளார்.

நான்காவது மற்றும் ஐந்தவாது இலக்கங்களில் ஹெரி டெக்டர், கரெத் டெலனி ஆகிய வீரர்கள் களமிறங்கவுள்ளதுடன், இதில் டெலனி, சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் ஆவார்.

மஹேலவால் T20 ஹீரோவான அகில

அதேபோல, அயர்லாந்து அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்களாக கிரைங் யங், ஜோஷ் லிட்ல் ஆகியோரும், பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக ஜோர்ஜ் டெக்ரெல் மற்றும் சிமி சிங் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, ஐசிசி இன் T20 உலக தரவரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள அயர்லாந்து அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் சாதிக்குமா என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

அயர்லாந்து அணி விபரம்:

Andrew Balbirnie (c), Mark Adair, Curtis Campher, Gareth Delany, George Dockrell, Josh Little, Andrew McBrine, Kevin O’Brien, Neil Rock, Simi Singh, Paul Stirling, Harry Tector, Lorcan Tucker, Ben White, Craig Young.

மேலதிக வீரர்கள்:

Shane Getkate, Graham Kennedy, Barry McCarthy

நமிபியா அணி

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்குகின்ற அதிரடி அணிகளில் ஒன்றுதான் நமிபியா. தென் மேற்கு ஆபிரிக்க நாடான நமிபியா, முதல் முறையாக ஐசிசி இன் T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

T20 உலக அணிகளுக்கான தரவரிசையில் 19ஆவது இடத்தில் உள்ள நமிபியா அணி, ஐசிசி இன் உறுப்பு நாடுகளில் ஒன்றாக அண்மைக்கலாமாக T-20 போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற முன்னணி அணிகளில் ஒன்றாக விளங்குகிறது.

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் அந்த அணியின் தலைவராக சகலதுறை வீரர் கெஹார்ட் எராஸ்மஸ் செயல்டவுள்ளார்.

15 பேர் கொண்ட நமீபியா அணியில் Stephan Baard, Karl Birkenstock, Jan Nicol Lofie-Eaton, Bernand Scholtz, Michael van Lingen, Craig Williams, Picky Ya France உள்ளிட்ட எட்டு வீரர்களும் சிறப்பு துடுப்பாட்டக் காரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன், சகலதுறை வீரர்களாக Jan Frylinck, JJ Smit, David Wiese மற்றும் அணித்தலைவர் Gerhard Erasmus ஆகிய நால்வரும்; பெயரிடப்பட்டுள்ளனர்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் நமீபியா அணியின் பிரதான துரும்புச் சீட்டாக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான டேவிட் வீஸ் அந்த அணிக்காக விளையாடவுள்ளார்.

இதனிடையே, நமிபியா அணியின் பிரதான Ben Shikongo மற்றும் Ruben Trumpelmann ஆகிய இருவரும் செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நமிபியா அணி விபரம்:

Gerhard Erasmus (c), Stephen Baard, Karl Birkenstock. Michau du Preez, Jan Frylinck, Zane Green, Nicol Lofie-Eaton, Bernard Scholtz, Ben Shikongo, JJ Smit, Ruben Trumpelmann, Michael van Lingen, David Wiese, Craig Williams, Picky Ya France

மேலதிக வீரர்; Mauritius Ngupita

நெதர்லாந்து அணி

2009 முதல் T20 உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியாக விளையாடி வருகின்ற ஒரு அணியாக நெதர்லாந்து அணி விளங்குகிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிரணிக்கு சவால் அளிக்கக்கூடிய வல்லமை அந்த அணிக்கு உண்டு.

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் நெதர்லாந்து அணியின் தலைவராக அனுபவமிக்க வீரரான பீட்டர் சீலார் செயல்படவுள்ளார்.

அத்துடன் அந்த அணியின் முக்கியமான துடுப்பாட்ட வீரர்களாக Colin Ackermann, Ben Cooper, Ryan ten Doeschate, Stephan Myburgh, Bas de Leede, Max O’Dowd உள்ளிட்ட ஆறு பேரும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் Stephan Myburgh, Max O’Dowd ஆகிய இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக செயல்படவுள்ளதுடன், இதில் Stephan Myburgh இறுதியாக 2016இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்திலும் நெதர்லாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

இதனிடையே, நெதர்லாந்து அணியின் பிரதான துரும்புச் சீட்டாக 41 வயதுடைய அனுபவ வீரரான ரையன் டென் டொஸ்சேர்ட் விளங்குகிறார்.

2019இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடிய அவர், 46.60 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 233 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

எனவே, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் அவருடைய பங்குபற்றல் நெதர்லாந்து அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே நெதர்லாந்து அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளர்களாக அணித்தலைவர் பீட்டர் சீலருடன் Roelof van der Merwe, Philippe Boissevain ஆகிய இருவரும் செயல்படவுள்ளனர்.

அத்துடன், Paul van Meekeren, Timm van der Gugten, Brandon Glover, Logan van Beek, Fred Klaassen ஆகிய ஐந்து பேரும் அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளனர்.

நெதர்லாந்து அணி விபரம்:

Pieter Seelaar (c), Colin Ackermann, Philippe Boissevain, Bas de Leede, Paul van Meekeren, Ben Cooper, Max O’Dowd, Scott Edwards, Ryan ten Doeschate, Timm van der Gugten, Roelof van der Merwe, Brandon Glover, Fred Klaassen, Logan van Beek, Stephan Myburgh

மேலதிக வீரர்கள்: Tobias Visée, Shane Snater

இறுதியாக….

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் தகுதிகாண் சுற்றில் A குழுவில் இடம்பெற்றுள்ள அணிகள் ஐசிசியின் தரவரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், T20 வடிவத்தை பொறுத்தமட்டில் போட்டி நடைபெறுகின்ற நாளில் அபார ஆற்றலை வெளிப்படுத்தி முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கின்ற வல்லமை அந்த அணிகளுக்கு உண்டு.

எனவே, நான்கு அணிகள் பங்குபற்றுகின்ற A குழுவில் இருந்து சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் இரண்டு அணிகளும் எதிர்பாராத வெற்றியைப் பதிவு செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளன. மேலும் இந்த நான்கு அணிகளையும் குறைத்து மதிப்பிடவும் முடியாது.

எனவே, ஒவ்வொரு அணியும் தமக்கான பாணியிலான போட்டிகளில் விளையாடி எவ்வாறு அடுத்து சுற்றுக்கு முன்னேறும் என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<