LPL தொடர் நடைபெறவுள்ள திகதிகள் அறிவிப்பு ; வீரர்கள் பதிவு ஆரம்பம்!

Lanka Premier League 2021

682

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) இரண்டாவது பருவகால போட்டிகள், எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி முதல் 23ம் திகதிவரை நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் LPL தொடர் ஆரம்பமாகியிருந்தது. இந்தப்போட்டி தொடரின் சம்பியனாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி மகுடம் சூடியிருந்தது.

மீண்டும் ஒத்திவைக்கப்படும் LPL தொடர்!

இவ்வாறான நிலையில், மீண்டும் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவிருந்த LPL தொடர், கொவிட்-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் ஜூலை 30ம் திகதி முதல் ஆகஸ்ட் 22ம் திகதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போது, தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரையடுத்து, LPL தொடர் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. அதன்படி, டிசம்பர் 4ம் திகதி முதல் 23ம் திகதிவரை LPL தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆரம்பமாகவுள்ள LPL தொடருக்கான வீரர்கள் பதிவு, எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் LPL தொடரின் உரிமத்துவத்தை பெற்றுள்ள IPG நிறுவனம் என்பன இணைந்து, LPL தொடரின் 3 அணிகளை நீக்குவதாக ஏற்கனவே, அறிவித்திருந்தன. ஜப்னா ஸ்டாலியன்ஸ், கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் ஆகிய அணிகள் இவ்வாறு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, இம்முறை தொடரில் புதிய அணிகள் மற்றும் புதிய வீரர்கள் என பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…