மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்த அஞ்செலோ மெதிவ்ஸ்!

Sri Lanka Cricket

1046
Angelo Mathews

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், மீண்டும் தன்னுடைய பயிற்சிகளை ஆரம்பித்துள்ள காணொளியை சமுகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அஞ்செலோ மெதிவ்ஸ் கடந்த மே மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடியிருந்தார். எவ்வாறாயினும், கடந்த ஜூன் மாதம் மெதிவ்ஸ் ஓய்வுபெறுவது தொடர்பில் சிந்தித்துவருவதாகவும் அதனால், அணி தேர்வில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும், இதுவரையில் மெதிவ்ஸ் ஓய்வுபெறுவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

>> ஊழல் புகாரில் சிக்கினார் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர்

அஞ்செலோ மெதிவ்ஸ் கடந்த காலங்களில் நடைபெற்ற பல மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களை தவறவிட்டிருந்தார். இவர் பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களைத் தவறவிட்டிருந்தார். குறிப்பாக இலங்கை அணியின் தேர்வுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க, இளம் வீரர்களுடன் அணியை கட்டமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியானது, டயலொக்-SLC அழைப்பு T20 லீக் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களை அடிப்படையாக வைத்து தெரிவுசெய்யப்பட்டது. அஞ்செலோ மெதிவ்ஸிற்கு சிறந்த அனுபவம் இருந்தும், T20 உலகக் கிண்ணத்துக்கான வாய்ப்பை இவர் பெற்றுக்கொள்ளவில்லை.

இலங்கை அணியானது, கடந்த 2009ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக அஞ்செலோ மெதிவ்ஸ் இல்லாமல், ஐசிசியின்  தொடரொன்றுக்காக தயாராகி வருகின்றது. இவர், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில், இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

மெதிவ்ஸ் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் கடந்த மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடியிருந்தார். இவருக்கு, சுமார் 300 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அனுபவம் உள்ளது. எனவே, எதிர்வரும் 2 வருடங்களுக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை அணிக்கு சிறந்தவொரு வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<