வனிந்து, சமீரவின் திறமைகளை புகழும் விராட் கோஹ்லி!

Indian Premier League 2021

4504

வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரின் திறன்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில், மிகப்பெரிய உதவியாக இருக்கும் என றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியிலிருந்து அடம் ஷாம்பா மற்றும் கேன் ரிச்சட்சன் போன்ற வீரர்கள் அணியிலிருந்து தவறவிடப்பட்டிருந்தாலும், தற்போது இணைக்கப்பட்டுள்ள வீரர்கள், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான ஆடுகள தன்மையை சிறப்பாக அறிந்து வைத்துள்ளவர்கள் என கோஹ்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

அபு தாபி T10 தொடரில் களமிறங்கும் இசுரு உதான!

இதுதொடர்பில் விராட் கோஹ்லி தெரிவிக்கையில், அடம் ஷாம்பா மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோர் முதல் பாதியில் அணியுடன் குறைந்த போட்டிகளில் விளையாடியிருந்தனர். அவர்கள் அணியுடன் ஒன்றிணைந்தவர்கள். எனினும், இரண்டாவது பாதியில் விளையாட முடியாது என்ற அவர்களுடைய முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அணியில் தற்போது இணைக்கப்பட்டுள்ள இரண்டு வீரர்களும், இவ்வாறான ஆடுகள தன்மையை நன்றாக அறிந்து வைத்தவர்கள். தற்போதைய காலப்பகுதியின் துணைக்கண்டத்தின் நிலைமைகள் ஒரே மாதிரியானவைதான்.

வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இலங்கையில் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளனர். இவ்வாறான ஆடுகளங்கள் எப்படி செயற்படும் என அவர்கள் அறிவதுடன், அவர்களுடைய திறன்கள் எமக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். டுபாய் எவ்வளவு வெப்பமானது என்பதிலிருந்து, இவ்வாறான நிலைமைகளில், ஆடுகளங்கள் எப்படி செயற்படும் என அனைத்தையும் அறிவர்என்றார்.

வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் கடந்த காலத்தில் நடைபெற்றுவரும் இலங்கை அணிக்கான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். வனிந்து ஹஸரங்க துணைக்கண்டத்தில் விளையாடியுள்ள 17 T20I போட்டிகளில், 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமாத்திரமின்றி, துடுப்பாட்டத்திலும் சிறப்பாக பிரகாசிக்கக்கூடியவர்.

துஷ்மந்த சமீர உபாதைக்கு பின்னர், இலங்கை அணிக்காக திரும்பிய பின்னர், அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளராக செயற்பட்டு வருகின்றார். இவர், இந்த ஆண்டு விளையாடிய 12 T20I போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…