33 ஆண்டு ஒலிம்பிக் சாதனையை முறியடித்த எலைன் தோம்சன்

Tokyo Olympics - 2020

453
Getty Image/ Reuters

டோக்கியோ ஒலிம்பிக்கின் எட்டாவது நாளான இன்று (31) பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றதுடன், உலகின் அதிவேக வீராங்கனை யார் என்பதை தீர்மானிக்கும் பெண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியும் நடைபெற்றது. 

அதேபோல, உலகின் முன்னணி வீரர்களின் அதிர்ச்சித் தோல்வி, ஊக்கமருந்து சர்ச்சை என பல அதிர்ச்சி சம்பவங்களும் அரங்கேறின.

மின்னல்எலைன் தோம்சன்

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 33 ஆண்டுகள் இருந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்த ஜமைக்காவின் எலெய்ன் தோம்சன் ஹேரா புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்

யுபுன் அபேகோனின் ஒலிம்பிக் எதிர்பார்ப்பும் தகர்ந்தது

டோக்கியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் ஜமைக்காவைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள், ஐவரி கோஸ்ட் வீராங்கனை, சுவிட்சர்லாந்தின் இரண்டு வீராங்கனைகள், அமெரிக்க வீராங்கனை, பிரிட்டன் வீராங்கனை என 8 பேர் பங்கேற்றனர்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்தப் போட்டியை 10.61 செக்கன்களில் நிறைவு செய்த எலெய்ன் தோம்சன் ஹேரா புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

2016 ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்ற இவர், 1988 சோல் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஐக்கிய அமெரிக்காவின் ஃப்ளொரென்ஸ் ஜொய்னர் க்றிஃபித் நிலைநாட்டிய ஒலிம்பிக் சாதனையை 33 ஆண்டுகளுக்குப் பின் முறியடித்து புதிய ஒலிம்பிக் சாதனையும் படைத்தார்.

ஜமைக்கா வீராங்கனைகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற இப்போட்டியில் முன்னாள் ஒலிம்பிக் சம்பியனும் நடப்பு உலக சம்பியனுமான ஷெலி ஆன் ப்ரேசர் ப்றைஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றார். இவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.74 செக்கன்களில் நிறைவு செய்தார்.

மற்றொரு ஜழைக்கா வீராங்கனையான ஷெரிக்கா ஜெக்சன் (10.76 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

சுவீடனுக்கு இரண்டு பதக்கங்கள்

ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதல் போட்டியின் இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் 12 வீரர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு வீரருக்கும் ஆறு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.

ஒலிம்பிக் மெய்வல்லுனர் முதல் தங்கம் எத்தியோப்பியா வசமானது

இதில் சுவீடன் வீரர் டேனியல் 68.90 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு சுவீடன் வீரரான சைமன் 67.39 மீட்டர் தூரத்திற்கு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அவுஸ்திரியா வீரர் லூகாஸ் 67.07 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கம் வென்றார்.

போலந்துக்கு முதல் தங்கம்

இம்முறை ஒலிம்பிக்கில் முதல்தடவையாக அறிமுகம் செய்யப்பட்ட 4X400 கலப்பு அஞ்சலோட்டத்தில் போலந்து அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. போட்டியை 3 நிமிடங்கள் 09.87 செக்கன்களில் அந்த அணி நிறைவுசெய்தது.

இதன்மூலம் புதிய ஒலிம்பிக் சாதனைளையும் அந்த அணி படைத்தது.

தங்கம் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அணி வெள்ளிப் பதக்கத்தையும், டொமினிகோ அணி வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தது.

ஸ்பெயினுக்கு வரலாற்று வெற்றி 

ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதல் டிராப் கலப்பு அணி போட்டியில் ஸ்பெயின் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் டிராப் கலப்பு அணி (Rap Mixed Team) பிரிவு இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்சென் மெரினோ அணிகள் மோதின.

இதில் ஸ்பெயின் அணி 41-40 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் முதன்முறையாக ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்ட போட்டியில் தங்கப் பதக்கம் வென்று ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது

தோல்வியடைந்த சென் மெரினோ வெள்ளிப் பதக்கமும், அமெரிக்கா வெண்கலப் பதக்கமும் வென்றன.

இம்முறை ஒலிம்பிக்கில் பங்குபற்றியுள்ள உலகின் மிகவும் சிறிய நாடுகளில் ஒன்றான சென் மெரினா இரண்டாவது பதக்கத்தை சுவீகரித்தது.

Photos: Day 8 – 2020 Tokyo Olympic Games

இந்தியாவுக்கு மீண்டும் ஏமாற்றம் 

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பி.வி சிந்து பெண்களுக்கான பெட்மிண்டன் அரை இறுதிச் சுற்றில் தோல்வியடைந்துள்ளார்

இன்று நடைபெற்ற அரை இறுதியில் பி.வி சிந்து சீனா தாய்ப்பேயைச் சேர்ந்த உலகின் முதல்நிலை வீராங்கனை தாய் சு யிங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டின் ஆரம்பத்தில் 11-8 என சிந்து முன்னிலை பெற்றிருந்தாலும் பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீனா தாய்ப்பே வீராங்கனை 21-18 என முதல் செட்டைக் கைப்பற்றினார். அடுத்த செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 21-12 என வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இதையடுத்து நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீன வீராங்கனை ஹி பிங் ஜாவ்வுடன் சிந்து மோதவுள்ளார்.

ஜோகோவிச்சுக்கு ஏமாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை உலகின் முதல்நிலை வீரரான நோவாக் ஜோகோவிச் போராடி இழந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் பேப்லோ கரீரியோ பஸ்டா இடையே இன்று கடும் போட்டி நடைபெற்றது

போட்டியின் முதல் செட்டை கரீரியோ 6-4 என கைப்பற்றினார்டைபிரேக்கர் வரை சென்ற 2ஆவது செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார். இதனால் போட்டி 1-1 என சமநிலைப் பெற்றது.

3ஆவது செட்டிலும் ஸ்பெயின் வீரர் பேப்லோ கரீரியோ பஸ்டா ஆதிக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் பேப்லோ கரீரியோ பஸ்டா 5-3 என முன்னிலைப் பெற்றிருந்தார். இந்த நிலையில், பேப்லோ கரீரியோ பஸ்டா, 6-4 என 3-வது செட்டையும் கைப்பற்றி ஜோகோவிச்சை தோற்கடித்தார்.

தங்கம் வென்று சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் வெண்கலப் பதக்கம் கூட பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். அதேபோல, காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக கலப்பு பிரிவு டென்னிஸ் போட்டியிலிருந்து அவர் விலகிக் கொண்டார்

ஒலிம்பிக் மெய்வல்லுனர் முதல் தங்கம் எத்தியோப்பியா வசமானது

நீச்சலில் இரண்டு உலக சாதனை முறியடிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இன்று நான்கு போட்டிகளின் இறுதிப்போட்டி நடைபெற்றன. ஆண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கெலிப் டிரெஸ்சல் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை 49.45 செக்கன்களில் நிறைவுசெய்த அவர் புதிய உலக சாதனையும் படைத்தார்.

இதன்மூலம் தனது ஐந்தாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

ஹங்கேரியின் மிலாக் வெள்ளிப் பதக்கமும், சுவிட்சர்லாந்தின் போன்ட்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இதனிடையே, பெண்களுக்கான 200 மீட்டர் பின்நோக்கிய நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் எம்மா மெக்கியோன் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் பெண்களுக்கான நீச்சலில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, பெண்களுக்கான 800 மீட்டர் சாதாரண நீச்சல் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கெடி லெடெக்கி தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனையாக புதிய சாதனை படைத்தார்

முன்னதாக இவர் 2012 லண்டன், 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இம்முறை ஒலிம்பிக்கில் இவரது 2ஆவது தங்கம் இதுவாகும். ஏற்கனவே, 1500 மீட்டர் சாதாரண நீச்சலில் அவர் தங்கத்தை தட்டிச் சென்றார்.

Photos: Day 7 – 2020 Tokyo Olympic Games

இதுஇவ்வாறிருக்க, ஒலிம்பிக்கில் முதன் முறையாக கலப்பு Medley அஞ்சலோட்டம் இன்று நடைபெற்றது. ஒரு நாட்டில் இருந்து இரு ஆண்களும், இரு பெண்களும் இந்த போட்டியில் பங்கேற்கலாம். இந்த நீச்சல் போட்டியில், எந்த வகையான நீச்சல் பிரிவில் யார் நீந்த வேண்டும் என்பதை அந்தந்த அணிகளே தீர்மானித்துக் கொள்ளலாம்.

இந்த போட்டியில், ஒவ்வொரு அணிகளும் Fresstyle பிரிவில் பெண்களை களமிறக்க, அமெரிக்கா அணி மட்டும் வித்தியாசமான யுக்தியை கையாண்டது. இன்று நடைபெற்ற 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சலில் தங்கப் பதக்கம் வென்ற கெலிப் டிரெஸ்சலை Freestyle பிரிவில் களமிறக்கினாலும் அமெரிக்காவின் முயற்சி எடுபடவில்லை

இந்தப் போட்டியை 3 நிமிடங்கள் 37.58 செக்கன்களில் நிறைவுசெய்த பிரித்தானியா அணி உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றது

சீனா அணி வெள்ளிப் பதக்கத்தையும், அவுஸ்திரேலியா அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

நைஜீரிய வீராங்கனை இடைநீக்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் அரை இறுதியில் பங்கேற்க இருந்த நைஜீரிய வீராங்கனை பிளெசிங் ஒகெக்பரே ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறும் பெண்களுக்கான 100 மீட்டர் அரை இறுதியில் பங்கேற்க நைஜீரிய வீராங்கனை பிளெசிங் ஒகெக்பரே தகுதி பெற்று இருந்தார். 

அவர் நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் 11.05 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து அரை இறுதிக்கு முன்னேறினார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் சீன வீரர்கள்

இந்த நிலையில் அவர் உடல் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கான ஊக்கமருந்தை பயன்படுத்தியமை பரிசோதனைகளின் மூலம் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சர்வதேச மெய்வல்லுனர் ஒருமைப்பாட்டுக் குழுவால் அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன்காரணமாக அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்

எழுவர் ரக்பியில் நியூசிலாந்து அணி சம்பியன்

டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான எழுவர் ரக்பி போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. பிரான்ஸ் அணியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 26-12 எனும் புள்ளிகள் அடிப்படையில் நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்றது.

பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த சீனா 

ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் எட்டாவது நாள் முடிவில் சீனா 21 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இன்றைய நாளில் மாத்திரம் சீனா 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது

ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

தொடர்ந்து ரஷ்யா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, தென் கொரியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் உள்ளன

மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…