T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறிய வனிந்து

ICC T20I Rankings

331

சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று (28) வெளியிட்டுள்ள புதிய T20I தரவரிசையில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தன்னுடைய வாழ்நாள் அதியுயர் புள்ளிகளை பெற்று, பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசியின் வாராந்த தரவரிசை பட்டியல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் மிகச்சிறப்பாக பந்துவீசி வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 

கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் வெளியாகின ; 2வது T20I இன்று!

அந்தவகையில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரான ரஷீட் கானை மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளி, வனிந்து ஹசரங்க T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளார். இவர், 720 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். குறித்த இந்த பட்டியலில், தென்னாபிரிக்க அணியின் சுழல் பந்துவீச்சாளர் டப்ரைஸ் ஷம்ஷி முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

T20I பந்துவீச்சாளர் தரவரிசையில் இலங்கை அணியின் மற்றுமொரு வீரரான லக்ஷான் சந்தகன் 13வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர 4 இடங்கள் முன்னேறி 37வது இடத்தை பிடித்துள்ளார்.

இவர்களுடன், இலங்கை அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் நான்கு இடங்கள் முன்னேறி 16வது இடத்தையும், யுஷ்வேந்திர சஹால் 10 இடங்கள் முன்னேறி 21வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை, 5 இடங்கள் முன்னேறியுள்ள இந்திய அணியின் தலைவர் ஷிக்கர் தவான் 29வது இடத்தை பிடித்துள்ளதுடன், சூர்யகுமார் யாதவ் 25 இடங்கள் முன்னேறி 42வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை பொருத்தவரை, எந்த வீரரும் முன்னேற்றங்களை காணவில்லை.

இதேவேளை, இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி, இன்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…