இலங்கையில் கால்பந்து முன்னேற இன்னும் 4, 5 வருடங்கள் தேவை – அமிர்

FIFA World Cup 2022

161

இலங்கை நாட்டில் கால்பந்து விளையாட்டு முன்னேற்றமடைய இன்னும் 4  அல்லது 5 வருடங்கள் தேவை என்றும் இலங்கை தேசிய கால்பந்து அணி சிறந்த போட்டியைக் கொடுக்க இன்னும் 2, 3 வருடங்கள் தேவை என்றும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அமிர் அலஜிக் தெரிவித்துள்ளார். 

இலங்கை கால்பந்து அணி நாளை (05) லெபனான் அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே தலைமைப் பயிற்றுவிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.  

2022 கால்பந்து உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்யும் பூர்வாங்க தகுதிகாண் சுற்றுத்தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளுக்காக இலங்கை அணி கடந்த மாதம் 31ஆம் திகதி தென் கொரியா நோக்கி பயணமானது.  

தென் கொரியா, லெபனானுடன் Defensive முறையில் ஆடவுள்ள இலங்கை அணி

இந்த தகுதிச் சுற்றில் எச் குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி இதற்கு முன்னர் இடம்பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில், தமது இறுதி இரண்டு போட்டிகளிலும்  இலங்கை அணி லெபனான் மற்றும் தென் கொரிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.  

இந்நிலையில், இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மேலும் கருத்து தெரிவித்த அமிர் அலஜிக், ”இலங்கை அணியின் தயார்படுத்தல்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று பெரிதும் தடையாக இருந்தது. வளர்ச்சி காணாத கால்பந்தைக் கொண்ட இலங்கையில் நாம் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்திக்கொண்டுள்ளோம்.   

பலம் மிக்க லெபனான் மற்றும் தென் கொரிய அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் எமக்கு பெரிதும் சவாலாக இருக்கும். ஆனால், எமது அணியில் அதிக அளவில் இளம் வீரர்களே உள்ளனர். நாம் அவர்களை வைத்து ஒரு தடுப்பு ஆட்டத்தை மேற்கொள்வோம்” என்றார். 

லெபனான் அணிக்கு எதிரான போட்டிக்கான தென் கொரியாவில் மேற்கொள்ளப்பட்ட தயார்படுத்தல்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமிர், ”நாம் இங்கு வந்தவுடன் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டோம். இங்குள்ள சுகாதார கட்டுப்பாடுகளுக்கும் சட்டங்களுக்கும் மத்தியில் எமது வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டது மிகவும் குறைவு” எனத் தெரிவித்தார்.

சர்வதேச அனுபவம் குறைந்த இளம் வீரர்களே தமது அணியில் இருப்பதாகத் தெரிவித்த அமிர், உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளாக இடம்பெறவுள்ள இந்த இரண்டு மோதல்களும் தனக்கு பயிற்சி ஆட்டங்களாகவே இருக்கும் என்றும், தனது இலக்கு  SAFF போட்டிகள்தான் என்றும் தெரிவித்தார்.  

இலங்கை கால்பந்தின் தற்போதைய நிலைமை குறித்து தனது கருத்தைப் பதிவிட்ட அவர், ”இலங்கையின் கால்பந்தில் அதிகளவான பிரச்சினைகள் உள்ளன. அண்மையில்தான் இலங்கையில் தொழில்முறைக் கால்பந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்ளூர் போட்டிகளுக்கும், சர்வதேசப் போட்டிகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.  

எனவே, இலங்கை நாட்டில் கால்பந்து விளையாட்டு முன்னேற்றமடைய இன்னும் 4 அல்லது 5 வருடங்கள் தேவை. அதேபோன்று, இலங்கை தேசிய கால்பந்து அணி சிறந்த போட்டியைக் கொடுக்க இன்னும் 2, 3 வருடங்கள் தேவை” என்று தெரிவித்தார். 

இலங்கை அணி இம்மாதம் 5ஆம் திகதி லெபனான் அணியையும், 9ஆம் திகதி தென் கொரியா அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. இரண்டு போட்டிகளும் தென் கொரியாவின் கொயங் அரங்கில் இடம்பெறவுள்ளன.  

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<