இளம் வீரர்களுக்கு சிறிது காலம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் – அமைச்சர் நாமல்

Sri Lanka Tour of Bangladesh - 2021

160

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரை இழந்தது கவலையளிப்பதாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தற்போதுள்ள இளம் வீரர்களுக்கு சிறிது காலம் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் பலமிக்க ஒரு அணியை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என கூறினார். 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி மோசமான துடுப்பாட்டம் காரணமாக தோல்வியைத் தழுவியது.

“வீரர்களின் அனுபவமின்மையே தோல்விக்கு காரணம்” – குசல் பெரேரா

இரு அணிகளுக்கும் இடையிலான 35 வருடகால ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் பங்களாதேஷ் அணி முதல்முறையாக இலங்கை அணிக்கெதிராக ஒருநாள் தொடரொன்றை வெற்றிகொண்டு சாதனை படைத்தது. 

இந்த நிலையில், இலங்கை அணியின் தோல்விக்கு திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ் போன்ற சிரேஷ் வீரர்களை அணியிலிருந்து நீக்கியமை தான் காரணம் என கிரிக்கெட் விமர்சகளும், ரசிகர்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இதனிடையே, இலங்கை அணியின் தோல்வி குறித்து நேற்று கண்டியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் பிறகு ஊடகவியலாளர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

”இலங்கை அணியின் தோல்வி குறித்து கவலையடைகிறேன். இந்தத் தொடருக்காக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு சிறிது காலம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதேபோல, தங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில், முழுமையான பயனைப் பெறுவதற்கு அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் தற்போது இலங்கை அணியின் கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். கடந்த ஐந்து வருடங்களாக அப்படியானதொரு திட்டம் இலங்கை கிரிக்கெட் அணியில் இருக்கவில்லை.

சிரேஷ் வீரர்களை அணியில் இணைத்தால், அவர்களை நீக்கி இளம் வீரர்களை இணைக்குமாறும், இளம் வீரர்களை இணைத்தால், ஏன் சிரேஷ் வீரர்களை இணைக்கவில்லை எனவும் வினவுகின்றனர். இந்த நிலைமை இரு பக்கத்திலும் உள்ளது. எனவே, அதற்கு ஒரு நியாயமான காலத்தை நாங்கள் வழங்க வேண்டும்.

இதற்கமைய, கட்டமைப்பு ரீதியான மாற்றத்துடன், எதிர்காலத்தில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையினால் முன்னேற்றம் கண்ட பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள்

இதேநேரம், திறமையான, புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் நிபுணர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, இலங்கையில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்காக நீண்டகால திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது

கிரிக்கட் அபிவிருத்திக்கான திட்டம் வகுக்க, அரவிந்த டி சில்வா, முத்தையா முரளிதரன், ரொஷான் மஹாநாம மற்றும் குமார் சங்கக்கார உள்ளிட்ட கிரிக்கெட் விளையாட்டில் நிபுணத்துவமிக்கவர்களுக்கு கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவில் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் வெற்றிக்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க அவர்களுக்கு இயலுமாக இருக்கும்” எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<