புதிய திட்டங்களுடன் பங்களாதேஷுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை

Sri Lanka tour of Bangladesh 2021

200

இளம் வீரர்களுடன் 2023ம் ஆண்டு உலகக் கிண்ணத்து தயாராக வேண்டும் என்ற திட்டத்துடன், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு பயணிப்பதாக புதிய ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான புதிய தலைவராக குசல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், தொடருக்கு முன்னதான ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட இவர், தெரிவுக்குழு அணியில் சில மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக என்னிடம் கூறினர். 2023ம் ஆண்டு உலகக் கிண்ண தொடர்வரை இதனை செய்ய எதிர்பார்ப்பதாக கூறினர். அத்துடன், புதிய வீரர்களை அணிக்குள் இணைப்பதை முதல் இலக்காக கொண்டுள்ளனர் என்றார். 

அத்துடன், தேர்வுக்குழு குசல் பெரேராவிடம் பொறுப்பான துடுப்பாட்டத்தை எதிர்பார்ப்பதாகவும், குறித்த விடயத்தை தான் முன்னேற்றிக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நான் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற எண்ணம் தேர்வுக்குழுவிடம் உள்ளது. அதிகமான சந்தர்ப்பங்களில் 50 அல்லது 60 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்கிறேன். அதனை சதங்களாக மாற்ற வேண்டும் என கூறினர். தனிப்பட்ட ரீதியிலும் இதனை நான் உணர்கிறேன்.

நான் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்கிறேன். இதனை சதங்களாக மாற்றினால், அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல இலகுவாக இருக்கும். ஆனால், அனைத்து போட்டிகளிலும் சதம் பெற முடியாது. ஆரம்பம் கிடைக்கும் போட்டிகளில், பொறுப்புடன் விளையாடி ஓட்டங்களை குவிக்க வேண்டும். இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தேர்வுக்குழு குறிப்பிட்டுள்ளது” 

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் காலங்களில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், வீரர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் குசல் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

வீரர்கள் போட்டிக்கு முன்னர் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களுடைய தவறுகளை திருத்திக்கொண்டு, எவ்வாறு போட்டிக்கு முகங்கொடுப்பது என்பதை தீர்மானிக்க வேண்டும். அவர்கள் நூறு சதவீதத்தை அணிக்காக கொடுக்க வேண்டும்.

வீரர்கள் அவர்களின் தவறுகளை தானாகவே திருத்திக்கொள்ள வேண்டும். அப்படி திருத்திக்கொண்டால், அணித்தலைவராக அவர்களுக்கு நான் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை கூறவேண்டிய அவசியமில்லை. கடந்த காலத்தில், அறிவுரைகள் கூறப்பட்டன. இதில் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. எனவே, மாற்றத்தை ஏற்படுத்தி அச்சமின்றிய கிரிக்கெட்டை ஆடவேண்டும். 

தங்களுடைய இடத்தை அணியில் தக்கவைக்கும் அச்சத்துடன், விளையாடினால் எம்மால் சரியாக விளையாட முடியாது. எனவே, அச்சமின்றி விளையாடினால், சில விடயங்களை மாற்றிக்கொள்ள முடியும்.  தங்களது திறமையை பயமின்றி வெளிக்காட்ட வேண்டும் என   நான் அனைத்து வீரர்களிடமும் கூறியுள்ளேன். இது சிலநேரம் தவறாக இருக்கலாம். ஆனால், இதனால் அதிக நன்மைகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

பயிற்சிகளை பெறும் போது, நாம் பயமின்றி செயற்படுகின்றோம். அதே விடயத்தினை நாம் போட்டியிலும் செயற்படுத்தினால் சாதகமான முடிவுகளை பெறமுடியும் என்றார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடர் குறித்து கருத்து வெளியிட்ட இவர், பங்களாதேஷ் தொடரை பொருத்தவரை, அந்த அணிக்கு எதிராக கடைசி தொடரை நாம் வெற்றிக்கொண்டோம். அதேபோன்ற அணிதான் அடுத்தடுத்த தொடர்களில் களமிறங்கினர். அதனால், எம்மைவிட அனுபவ ரீதியில் அவர்கள் முன்னிலையில் உள்ளனர்.

இலங்கை அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு

ஆனால், அனுபவம் என்பதை நாம் தொடர்ச்சியாக பார்க்க முடியாது. வீரர்கள் அதிகமான முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ளனர். அவர்களுக்கு சர்வதேச போட்டிகளுக்கான அனுபவம் மாத்திரமே இல்லை. சொந்த மண் என்பதால், பங்களாதேஷ் அணிக்கு சாதகத்தன்மை அதிகம். எனினும், எமது காலநிலையை விட அதிக வித்தியாசமல்ல. எனவே, வீரர்கள் தங்களுக்கு தெரிந்த விடயங்களை சரியாக செயற்படுத்தினால், சாதகமான முடிவை பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அணி நாளைய தினம் (16) பங்களாதேஷ் செல்லவுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள், இம்மாதம் 23, 25 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…