டெஸ்ட் தொடர் வெற்றியை நெருங்கியுள்ள இலங்கை அணி

Bangladesh tour of Sri Lanka 2021

186

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 437 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி நான்காவது நாள் ஆட்டநேர நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டநேர நிறைவில், 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், துடுப்பாட்ட இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி மதியபோசன இடைவேளைக்கு பின்னர், 194 ஓட்டங்களுக்கு தங்களுடைய 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது.

கன்னி டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த ப்ரவீன் ஜயவிக்ரம

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், ரமேஷ் மெண்டிஸ், ப்ரவீன் ஜயவிக்ரம, விஷ்வ பெர்னாண்டோ

பங்களாதேஷ் அணி

தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், சொரிபுல் இஸ்லாம்

இலங்கை அணி சார்பில், அதிகபட்சமாக திமுத் கருணாரத்ன மாத்திரம் அரைச்சதம் கடந்து 66 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இவருக்கு அடுத்தப்படியாக தனன்ஜய டி சில்வா 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தாஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹாசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை நிறைவுசெய்ய, பங்களாதேஷ் அணி 437 என்ற பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும்,  சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தனர்.

இன்றைய ஆட்டநேரத்தின் தேநீர் இடைவேளைக்கு முன்னர் தமிம் இக்பால், நஜ்முல் ஹுசைன் சென்டோ மற்றும் சயிப் ஹசன் ஆகியோர் ஆட்டமிழக்க, தேநீர் இடைவேளையின் போது, 112 ஓட்டங்களுக்கு பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ச்சியாக ஆரம்பித்த இந்தப்போட்டியில், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் ப்ரவீன் ஜயவிக்ரம ஆகியோர் பங்களாதேஷ் அணிக்கு, நெருக்கடி கொடுக்க, மொமினுல் ஹக் 32 ஓட்டங்களுடனும், முஷ்பிகூர் ரஹீம் 40 ஓட்டங்களுடனும், ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட, பங்களாதேஷ் அணி 175 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணிசார்பில், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும், ப்ரவீன் ஜயவிக்ரம 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் இறுதிநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 260 ஓட்டங்கள் தேவை என்பதுடன், இலங்கை அணி 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் தொடர் வெற்றியை பதிவுசெய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…